புதுச்சேரி:
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை எப்படியாவது கவிழ்த்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்கிற கோரப்பசியுடன் கடந்த 5 ஆண்டுகளாகபல்வேறு வகையிலும் தொந்தரவுகள் கொடுத்து வருகிறது மோடி அரசு.
புதுவையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசுக்கு எதிராக கடந்த 4 ஆண்டு காலம் ஒரு போட்டி ஆட்சியை நடத்தி வந்தார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. நியமன எம்எல்ஏக்கள் தேர்வு உள்ளிட்ட எதையும் முதலமைச்சரோடு கலந்து பேசுவதில்லை. தானடித்த மூப்பாக செயல்பட்டு வந்த கிரண்பேடிக்கு அவரது எஜமானர்களிடம் இருந்து ‘கிரீன் சிக்னல்’ கிடைத்துக்கொண்டே இருந்தது. இது மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அம்பலமானதால் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியை வீழ்த்த முடியாமல் விழி பிதுங்கினார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற விருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை குறுக்கு வழியில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கவிழ்க்கும் அரசியல்சட்டவிரோத இழிசெயலில் ஈடுபட்டுள்ள பாஜக, அதே பாணியில் ‘அஸ்திரத்தை’புதுச்சேரியிலும் தொடுத்தனர். இந்த சதிராட்டத்திற்கு பலியாகி புதுவை காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான நமசிவாயம் பாஜகவில் கரைந்தார். அவரைத் தொடர்ந்து, 25 ஆண்டுகாலம் எம்எல்ஏவாக பணியாற்றிவரும் மற்றொரு அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாந்தன், ஜான் குமார் என வரிசையாக தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இத்தகைய பின்னணியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி புதுச்சேரிக்கு புதனன்று தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையே, அவருடனும் அமைச்சர்மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுட னும்முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. முதல்வர் பதவி ராஜினாமா என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் காரணம் அனைவருக்கும் தெரியும். எனது ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆட்சியில் 4 ஆண்டுகள் இருந்து விட்டு வெளியேறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
விலைக்கு வாங்கி....
அமைச்சர்களின் துறைகளில் நான் தலையிட்டது கிடையாது. அவர்கள் எந்த நோக்கத்துடன் பா.ஜனதா சென்றுள்ளனர் என மக்களுக்கு தெரியும். இந்திய நாட்டில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது பா.ஜனதாவின் வேலையாக உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க்ளை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தனர்.
பாஜக அராஜகம்
இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. எங்கும் பெரும்பான்மை கிடையாது. பெரும் பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சியை கொண்டு வருகிறார்கள். இது ஜனநாயகம் கிடையாது. தர்மம் கிடையாது. அராஜகம் தான் செய்கிறார்கள்.
போணியாகாத கட்சி பாஜக
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என பா.ஜனதாவினர் மிரட்டுகின்றனர். யாரும் மனமுவந்து செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு தான் பா.ஜனதா எப்படிப்பட்ட கட்சி என அவர்களுக்கு தெரியும்.எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால் காங்கிரஸ் பலவீனமடையவில்லை. புதுவையில் பா.ஜனதா போணி ஆகாத கட்சி.கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் எத்தனை பேர் டெபாசிட் வாங்குவார்கள் என பார்க்க வேண்டும். மக்கள் காங்கிரஸ்-தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள். பதவியில் இல்லாமல் தேர்தலை சந்திக்க காங்கிரஸ்-தி.மு.க.வுக்கு பயம் கிடையாது. எங்கள் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. 2 எம்.எல்.ஏ. சென்றுவிட்டதால் ஆட்சி போனதாக அர்த்தமில்லை. பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறோம். பாஜக ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப் போம். தற்போது பதவி விலகியுள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து கடுமையாக தொல்லைகளை கொடுத்தார். அவரை திட்டமிட்டு பழி வாங்கினார்.அவர் தனது தொகுதி தொடர்பாக எந்த திட்டங்களை கொண்டு சென்றாலும் அதை ஆளுநர் புறக்கணித்தார். அவருக்காக 4 ஆண்டுகளாக நானும் போராடினேன். மல்லாடி கிருஷ்ணாராவ் தற்போது வரை எங்களோடுதான் இருக்கிறார். அவரை சமரசப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.இந்த நிலையில், கிரண்பேடியை இரவோடு இரவாக திரும்பப் பெற்றுகொண்ட மோடி அரசு, தமிழக பாஜகதலைவராக இருந்தவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழசைக்கு கூடுதல் பொறுப்பாக புதுவையை ஒப்படைத்துள்ளது.