புதுச்சேரியில் 1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக உள்ளிருப்பு போராட்டம் துவங்கினார்கள். கடும் கோபம் கொண்ட பிரஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு ராணுவத்தால் ஆலையை சுற்றி வளைத்தது. ரோடு ரோலரை கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். பலர் கையில் கிடைத்ததை கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். அன்றைய துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை, கால் என உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரியில் பிரதான சாலை ரத்தம் தோய்ந்து சிவப்பேறியிருந்தது.புதுச்சேரியில் ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் செய்தன. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வலுவான கண்டனக் குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா, ஜவஹர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்சு சென்றார். இந்தப் பின்னணியில் 8 மணி நேர வேலை உரிமை சட்டமாக்கப்பட்டது. தெற்கு ஆசியக் கண்டத்தில் புதுச்சேரியில் தான் முதன் முதலில் 8 மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது. மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.