புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கேட்டு இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, மார்ச் 2-ஆம் தேதி மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து 5-ஆம் தேதி சிறுமி வீட்டின் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் என இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொலையைக் கண்டித்தும், புதுச்சேரியில் அதிகரித்துள்ள வரும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கத் தவறிய என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராகவும் ‘இந்தியா கூட்டணி’ கட்சி சார்பில், இன்று புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம், திமுக, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.