புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி அரசியலில் முக்கிய பிரமுகராக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் (74). புதுச்சேரி அரசில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி என பல்வேறு பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்த ப.கண்ணன், தமிழகத்தில் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை தொடங்கியபோது புதுச்சேரியில் அக்கட்சியின் தலைவராக இருந்தார். தொடர்ந்து புதுவை மக்கள் காங்கிரஸ், புதுவை முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சிகளை தொடங்கி நடத்தினார்.
பின்னர் அதிமுகவிலும், பாஜகவிலும் இணைந்து செயல்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அவர் தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ப.கண்ணனின் மறைவுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் மற்றும் மாநிலக்குழு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.