புதுச்சேரி:
புதுச்சேரியில் ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ள மத்திய பாஜக அரசை கண்டித்தும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், விளை நிலங்கள் மற்றும் உணவு உரிமையை பறிக்கும் மூன்றுவேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டியும், 9 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரியும் முறை சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தியும் மக்கள் கோரிக்கை பேரணி புதனன்று (பிப்.24) நடைபெற்றது.புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கினார். முக்கிய வீதிகளின் வழியாக சென்று மிஷன் வீதியில் நிறைவடைந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசினார். அவர் பேசியதாவது:
“தலைநகர் தில்லியில் நடந்த போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு கூடமுன்வராத மோடி அரசு, உச்சநீதி மன்றத்தின் மூலம் ஒடுக்கநினைத்தது. விவசாயிகளின் போராட்டத்தை சகிக்க முடியாமல் சாலையில் ஆணிஅடித்து ஒடுக்க நினைக்கும் பாஜக அரசின் சவப்பெட்டிக்கு விரைவில் விவசாயிகள் ஆணி அடிப்பார்கள்.புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக செயல்பட விடாமல் ஜனநாயகப் படுகொலை செய்துள்ள பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற பொதுத் தேர்தலில் புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் சவுக்கடி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
படுகுழியில் ஜனநாயகம்...
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் கோரிக்கை பேரணியில் பங்கேற்று பேசுகையில்,“சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி வியாபாரிகளிடம் நிதி வசூல்செய்தோம். அப்போது, வியாபாரமே நடைபெறுவதில்லை என்றும் தொழிலும் முடங்கிவிட்டது என்றும் குமுறினார்கள்” என்றார்.புதுச்சேரியில் கடந்த முறை டெபாசிட்டை இழந்த பாஜகவினர் கொல்லைப்புறமாக சட்டப்பேரவைக்குள் நுழைந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசையே கலைத்து, ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளியுள்ளனர். இதற்கு புதுச்சேரி மக்கள் வரும்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், வி.பெருமாள், மூத்தத் தலைவர் தா.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.