1 ஆம் பக்கத் தொடர்ச்சி...
நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அரசுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
சட்டப்பேரவையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தை முன்மொழிய பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அனுமதி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தீர்மானத்தை முன் மொழிந்து உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:-
புதுச்சேரி காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கடந்த நான்கரை ஆண்டு காலமாக மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை மத்தியில் ஆளும் பாஜகதனது அரசியல் ஏஜென்ட் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் தடுத்து வந்தது. எங்கள் அரசுக்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் கிரண்பேடி மூலம் அரசை செயல்படவிடாமல், மக்கள் நலத்திட் டங்களை தடுத்து வந்தது. இடையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை கலைப்பதற்கு, கவிழ்ப்பதற்கு பல்வேறு சதிகளையும் செய்தது. இதனைஎல்லாம் முறியடித்து எங்கள் அரசு 5 ஆண்டுகாலம் நிறைவடைய உள்ளது.
யாரையும் மிரட்டலாம், யாரையும் எப்படிவேண்டுமானாலும் கவனிக்கலாம் என மத்தியில் ஆள்பவர்கள் நினைக்கின்றனர். ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடுவார்கள் என்பது எனக்குதெரியும். எம்எல்ஏ.க்களை கவனித்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இப்படித்தான் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு பாரதியஜனதா கட்சியினர் வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். இது ஜனநாயகப் படுகொலை, சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது இப்படி அரசியல் விபச்சாரத்தில் மத்தியஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். உண்மைதான் பேசும், வாய்மையே வெல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.
நாளை உங்களுக்கும் இந்த நிலை..
தனது பேச்சின் போது, நாளைக்கு இதேநிலை உங்களுக்கும் ஏற்படும் என்று எதிர்வரிசையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்ரங்கசாமிக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசு மற்றும்துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியுடன் மக்களால் றக்கணிக்கப்பட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்துகொண்டு இந்த அரசு கலைப்பதற்கு அனைத்து வகையிலும் துணை நின்றனர் என்றும் சாடினார்.மேலும் இந்த இக்கட்டான இத்தருணத்தில் தமது அரசிற்கு ஆதரவளிக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் அதேபோல் மாஹே தொகுதி சுயேட்சை உறுப்பினர் (சிபிஎம் ஆதரவு பெற்ற) பேராசிரியர் ராமச் சந்திரன் ஆகியோருக்கும் நாராயணசாமி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
வாக்குவாதம்
மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு சிறப்புஅந்தஸ்து வழங்காமல் வஞ்சித்த மோடிஅரசு, மக்களவைத் தேர்தலில் அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் நாராயணசாமி. அப்போது, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரின் உரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். பாஜகவின் ஊதுகுழல்களுக்கு கடும் ஆட்சேபணை தெரிவித்த மதச்சார்பற்ற அணி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம்நிலவியது.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கடந்த ஆட்சியில் விட்டுச்சென்ற, நிறைவேற்றாத திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்று நீண்ட பட்டியலையும் வாசித்தார். கொரோனா காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உயிரைப்பணயம் வைத்து பணி செய்தனர். அப்போதுஇந்த எதிர்க் கட்சியினர் எங்கே இருந்தார் கள் என்பது புதுவை மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார்.முதல்வர் நாராயணசாமி தமது உரையைமுடித்ததும் பேசிய அரசுக் கொறடா அனந்தராமன்,“ குடியரசுத் தலைவர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை பேரவைத் தலைவர்விளக்க வேண்டும்” என்றார்.இந்நிலையில், பாஜகவின் அரசியல் சூழ்ச்சி வலையில் தன்னை இழந்த பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக மவுனம் சாதித்தார்.இதனையடுத்து, முதல்வர் நாராயணசாமி, சக அமைச்சர்கள் மற்றும் மதச்சார்பற்ற
அணி எம்எல்ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
தீர்மானம் தோல்வி
முதலமைச்சர் வெளியேறிய அடுத்த சில வினாடிகளிலேயே, முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை கோரும்தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் அரசுதோல்வி அடைந்துள்ளது என்று கூறியபேரவைத் தலைவர் கூட்டத்தை காலவரையின்றி ஒத்தி வைத்தார்.
ராஜினாமா
பேரவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்வர் நாராயணசாமி சகஅமைச்சர்களுடன் தனது அறைக்கு சென்றுசற்று, நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு துணை நிலை ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜனைச் சந்தித்து தமது அரசின் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
சிபிஎம் கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அருணாச்சலப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிதனது அதிகாரத்தை பாஜக நிலைநிறுத்தி அரசியல் படுகொலையைச் செய்தது. அதேபாணியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசை பாஜக கவிழ்த்துள்ளது. ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் பாஜக, அதன்கூட்டணி கட்சிகளை எதிர்வரும் சட்டமன்றபொதுத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
************************
7 எம்எல்ஏக்களை எப்படி வளைத்தது பாஜக?
1. தனபால்- பதவி நீக்கம்
2. நமச்சிவாயம் - பாஜகவில் திடீரென இணைந்து, எம்எல்ஏ பதவி ராஜினாமா
3. தீப்பாய்ந்தான் - பாஜகவில் திடீரென இணைந்து, எம்எல்ஏ பதவி ராஜினாமா
4. மல்லாடி கிருஷ்ணா ராவ் - பாஜகவினரால் திருப்பதி தேவஸ்வம் போர்டுக்கு நியமிக்கப்பட்டதால் திடீர் ராஜினாமா
5. ஜான்குமார் - வருமான வரி சம்மன் அனுப்பி மிரட்டியதால் ராஜினாமா
6. லட்சுமி நாராயணன் - ராஜ்பவன் தொகுதியை தக்க வைத்து தருகிறோம் என்று பாஜகவினரின் ஆசை வலையில் விழுந்து ராஜினாமா
7. வெங்கடேசன் - பாஜகவின் பல்வேறு மிரட்டல்களுக்கு பணிந்து திடீர் ராஜினாமா