பெரம்பூர், மே 18-சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குடிநீர் வாரியம் லாரிகளில் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்தாலும் பல்வேறு பகுதிக ளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.பெரம்பூர் தீட்டித் தோட்டம் 1-வது தெரு முதல் 7-வது தெரு மற்றும் ஜானகிராமன் நகர் பகுதிக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்பட வில்லை. குழாய்களில் குடிநீர் வரும்போது கழிவு நீரும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நிறம் மாறி வரும் தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் வீட்டு உபயோகத்திற்குதான் பயன்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குடிநீர் தேவை அதிகரித்து வரும் கோடை காலத்தில் இப்பிரச்சினையை பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் சனிக்கிழமையன்று (மே 18) அப்பகுதி மக்கள் சுமார் பேப்பர் மில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்து செம்பியம் மற்றும் திரு.வி.க. நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதாகஉறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது