tamilnadu

img

என்ஆர்சி விவகாரத்தில் பாஜக மக்களை ஏமாற்றுகிறது... ஜேடியு தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

பாட்னா:
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தில், பாஜக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் துணைத்தலை வரும், தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில்தான் உள்ளது. அந்த வகையில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவையும் அந்தக்கட்சி ஆதரித்து வாக்களித்தது. அப்போதே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் துணைத் தலைவரான பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி எடுத்த முடிவு சரியல்ல என்று, நிதிஷ் குமாரிடம் நேரடியாகவே வாதிட்டார்.

இதன்காரணமாக குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) நாங்கள் ஆதரித்தாலும், குடியுரிமைப் பதிவேட்டை (என்ஆர்சி) ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று நிதிஷ்குமார் அறிவித்தார்.பிரசாந்த் கிஷோர் அத்துடன் நிற்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், சிஏஏ, என்ஆர்சி விஷயத்தில் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதனிடையே போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட மோடி அரசு, “என்ஆர்சி குறித்து நாடாளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ விவாதம் நடத்தவில்லை. என்ஆர்சி இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது” என்று பின்வாங்கினார். ஆனால், இது பாஜக-வின் தந்திரம் என்று கிஷோர் விமர்சித்துள்ளார்.“தேசிய குடியுரிமைப் பதிவேட்டைச் செயல்படுத்தமாட்டோம் என்று பாஜக கூறியிருப்பதில் உண்மையில்லை. அது தந்திரமான பின்வாங்கல். என்ஆர்சி-க்கும், சிஏஏ-வுக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இது தற்காலிக நிறுத்தம்தான், முற்றுப்புள்ளி அல்ல” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மோடி அரசு காத்திருக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.