tamilnadu

img

பழனியின் துயரம்.... ரூ.58 கோடி சிறப்பு திட்டம்...

பழனி:
பழனி நகரத்தில் முதலமைச்சரின் ரூ.58 கோடி சிறப்பு திட்டம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேறினால் பழனி நகரமே அழகு பூங்காவாக மாறி விடும் என்றெல்லாம் நெடுஞ்சாலைத் துறையால் சொல்லப்பட்டது. பழனி நகரத்தில் நடைபெறக்கூடிய பணிகள் பழனி நகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை. பழனி நகராட்சி வசம் இருந்தால் பணிகள் சரியாக நடக்காது என்று சொல்லி நெடுஞ்சாலைத்துறை வசம் கொடுக்கப்பட்டன .58 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் ஏன் பழனிக்கு வந்ததோ என்று சொல்லக் கூடிய வகையில் இன்றைக்கு பழனி நகர மக்கள் துன்பத்தில் உள்ளனர்.

பழனி நகரின் முக்கிய வீதிகளான திருவள்ளுவர் சாலை, ரெட் கிராஸ் ரோடு, ஆர்எப் ரோடு, கான்வென்ட் ரோடு, பழைய தாராபுரம் சாலை, மதனபுரம் சாலை, காந்திநகர் பாலிடெக்னிக் ரோடு போன்ற பகுதிகள் எல்லாம் சாக்கடைகள் 4அடி  ஆழத்திற்கு தோண்டப்பட்டு சாலையை விட இரண்டு அடி உயரத்தில்  மூடப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. எந்த சாக்கடையும் தண்ணீர் உடனடியாக கடந்து செல்லக்கூடிய வகையில் வாட்டம் பார்த்து கட்டப்படவில்லை. திட்ட மதிப்பீட்டில் உயரத்திலும் அகலத்திலும் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கட்டிக் கொண்டு செல்கிறார்கள். வீடுகள் கீழே இருக்கிறது. சாக்கடையின் உயரம் இரண்டடி உயரத்தில் இருக்கிறது. மழை பெய்தால் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கும். 

உதாரணமாக சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரக்கூடிய காந்தி நகர் மக்கள் பாலிடெக்னிக் அருகில் குடியிருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகள் அனைத்தும் மழையில் மூழ்கிவிடும் அபாய சூழ்நிலை தான் ஏற்பட்டிருக்கிறது அதுபோல உயரத்தில் உள்ள சாக்கடையை தாண்டித்தான் வீடுகளுக்கு செல்லவேண்டும். குழந்தைகள் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்வதற்கே  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவருடைய உதவி இல்லாமல் இவர்கள் தங்களுடைய குடியிருப்பு வீடுகளுக்கு உள்ளேயே செல்ல முடியாது. சாக்கடை என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்து முடியும் வரை கட்டப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நிறைவேற்றப்படுகிறது. மீதி சிறிய சாக்கடையில் கொண்டு போய் பெரிய சாக்கடையை நுழைக்கிறார்கள். அந்த இடத்தில்  மழை பெய்தால் சாலை முழுவதும் சாக்கடை நீர் தான் ஓடும். ரெட்கிராஸ் ரோடு, திருவள்ளுவர் குறுக்கு சாலை சந்திக்கும் இடத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும்.ஆனால் கட்டப்படவில்லை. மழைக் காலத்தில் கழிவுநீர் வெள்ளம் போல் இருக்கும். பல இடங்களில் குடிநீர் திட்ட இரும்பு குழாய்கள், வீட்டு குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு புதிய குழாய்கள் போடப்படவில்லை. இதனால் மக்களுக்கும் நகராட்சிக்கும் நிதி இழப்பு அதிகம். குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

மின்கம்பம் விழுந்து விட்டது.ரெட்கிராஸ்ரோட்டில் தோன்டிய குழியில் இருவர் விழுந்து காயம் அடைந்தனர். மரம் விழுந்து விட்டது.ஆனால் நெடுஞ்சாலை துறை எதுவும் நடக்காதது போல் அமைதிகாப்பது  மோசமான அணுகுமுறை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவரும் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான வ.ராஜமாணிக்கம், இப்பிரச்சனைகள் தொடர்பாக நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதினார். இன்று வரை அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. மேலும், இந்த பணியின் விவரம் எதுவுமே பொதுமக்களுக்குத் தெரியாது. பணியின் விவரம், ஒப்பந்ததாரர்  பெயர், பணி எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்று தகவல் பலகை எந்த இடத்திலும் இல்லை. 

காவல்துறையால் சிசிடிவி கேமராக்கள் பல்வேறு விதமான கண்காணிப்புக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய வயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டுள்ளது. இன்றுவரை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தவறுகளை கண்காணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சாக்கடையை யாராலும் இறங்கி சுத்தம் செய்ய முடியாது.  திறக்கின்ற பொழுது விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளது. இரண்டு அடி கழிவுநீர் எப்பொழுதுமே நின்று கொண்டிருக்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்களுடன் இதற்கென்று பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் நகராட்சியில் இல்லை. பழனியை பொறுத்தவரை திறந்த வெளி சாக்கடைகள் தான் உள்ளது.

எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி நகரை மக்களை பாதுகாத்திட இந்தத் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக திட்டப் பணியை வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றப்படவேண்டும்; சாக்கடைத் தண்ணீர் வேகமாக கடந்து செல்லக்கூடிய வகையில் வாட்டத்துடன் சாக்கடை கட்டப்பட வேண்டும்; வீடுகளுக்குள் மழை நீர் செல்லதவகையில் வீடுகள் பாதுகாக்கப்படவேண்டும்; உடைந்த குடிநீர் குழாய்களை இரும்பு குழாய்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (ஜூலை 15) நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு முன்னாள் நகர்மன்றத் தலைவர் வ.ராஜமாணிக்கம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.

- கே.கந்தசாமி, சிபிஎம் நகரச் செயலாளர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், பழனி