பழனி:
பழனி ஆயக்குடியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (38). எம்.பி.ஏ.பட்டதாரியான இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே பணியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட அவர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஆயக்குடியில் இவருக்கு சுமார் நான்கு ஏக்கர் கொய்யா தோட்டம் உள்ளது. இதில் விளையும் கொய் யாவை சாலைக்கு கொண்டு வந்துகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்றுள்ளார். திடீரென பழனியில் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் விளையும் கொய்யாவை என்ன செய்வதென்று யோசித்த மகுடீஸ்வரன் தனது வலைதள பக்கத்தில் கொய்யா வியாபாரத்தை தொடங்கியுள்ளார். அதில் ரூ.20-க்கு ஒரு கிலோ கொய்யா கிடைக்கும். சொந்த தோட்டத்து காய் என பதிவிட்டுள்ளார். தற்போது அவரது பதிவைப் பார்த்துஏராளமானோர் காய்களை வாங்கிச்செல்கின்றனர்.இதுகுறித்து மகுடீஸ்வரன் கூறுகையில், ஆயக்குடியைச் சுற்றி சுமார்40 கிராமங்கள் உள்ளன. சுமார் 1,000ஏக்கரில் கொய்யா விளைவிக்கப்படுகிறது. லக்னோ-49, பனராஸ் என்ற இரு ரகங்களை பயிரிடுகிறோம். லக்னோ-49 உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தது. ஆப்பிள் அளவிற்கு இருக்கும். பனராஸ் ஆந்திரா வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு காயும் குறைந்தது அரைகிலோ இருக்கும். ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் முதல் இரண்டரை டன் காய்கள் கிடைக்கும். இங்கு விளையும் கொய்யாவை கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளுக்கும், கேரளா மாநிலத்திற்கும் அனுப்புவோம். எங்களது விற்பனை சந்தையே கேரளா தான். தற்போது கொரோனா பரவலால் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யமுடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்யும் நாங்கள் கொரோனா காலத்தில் என்னசெய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். எப்படியாவது விளையும் கொய்யாவை விற்பனை செய்துவிட
வேண்டுமென ஆயக்குடி பகுதி விவசாயிகள் தவியாய் தவிக்கிறார்கள். நான் கொஞ்சம் யோசித்து முகநூல் விற்பனையை தொடங்கியுள்ளேன் என்றார்.
கொரோனா காலத்தில் விவசாயிகள் எப்படியெல்லாம் தங்களது பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதற்கு ஆயக்குடி கொய்யா விவசாயிகள் ஒரு உதாரணம்.