world

img

மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கம் நீக்கம்!

மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கத்தை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது. இதனால் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இதில், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் இதுவரை 3 போ் பலியாகியுள்ளனா்.
இந்நிலையில் மியான்மா் ராணுவத்தின் முகநூல் பக்கத்தை முகநூல் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதுகுறித்து முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மா் ராணுவத்தின் செய்திகளை வெளியிடும் முகநூல் பக்கம் தொடா்ந்து எங்களது உலகளாவிய விதிகளை மீறி வருகிறது. எங்களின் கொள்கைக்கு மாறாக, வன்முறையைத் தூண்டும் விதமாகவும் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் தளமாகவும் அந்தப் பக்கம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அந்தப் பக்கம் நீக்கப்படுகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.