பெங்களூரு:
இந்தியாவின் முன்னணி பேமெண்ட் சிஸ்டம் நிறுவனங்களில் ‘பேடிஎம்’-மும் ஒன்று. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’. இதன் நிதி ஆண்டு முடிவுகள் மற்றும் ஆண்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அதில்தான், 2018 - 19 நிதியாண்டில் மொத்தம் ரூ. 4 ஆயிரத்து 217 கோடி அளவிற்கு ‘பேடிஎம்’ நிறுவனம் நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2017 - 18 நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நஷ்டம் 1,604 கோடி ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், ஒரே ஆண்டுக்குள் 2018-19-இல் நஷ்டம் 300 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 - 18 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் வருவாய் 3 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது 2018 - 19 நிதியாண்டில் 8.2 சதவிகிதம் உயர்ந்து 3 ஆயிரத்து 579 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017 - 18 நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தின் செலவு 4 ஆயிரத்து 864 கோடி ரூபாயாகவும், 2018 - 19 நிதியாண்டில் 7 ஆயிரத்து 730 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. செலவினங்கள் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.அதாவது, பேடிஎம் நிறுவனம் தன்னுடைய பிராண்டின் பெயரை மக்கள் மத்தியில் இன்னும் பெரிதாக பதிய வைக்க கூடுதலான தொகையை செலவு செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முதலீடுகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு செலவினங்களையும் மேற்கொண்டுள்ளது. இதுவே செலவின அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம்தான் பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பீடுகள் சுமாராக 25 சதவிகிதம் அதிகரித்து 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறி இருப்பதாக கூறப்பட்டது. இதனடிப்படையில், 2020 - 2021 நிதி ஆண்டில் பேடிஎம் நிறுவனம் சுமார் 200 கோடி லாபம் பார்க்கலாம் என்றும், வரும் 2026 நிதி ஆண்டில் சுமார் 8,512 கோடி லாபம் பார்க்கலாம் எனக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.