தான் வேலை செய்யும் துணிக்கடைக்குள் ஒரு பெண் ஊழியர் நுழைகிறார். பணியிடத் திற்கு சென்று வழக்கம் போல் நிற்கிறார்.அருகிலேயே சிரித்த முகத்துடன் நின்றுகொண்டு இருக்கிறார் கடை முதலாளி. அவருக்கு பின்னாலிருந்து ஒரு பெண் அந்த பெண் ஊழியரின் அருகில் சென்று ஸ்டூல் ஒன்றை எடுத்து கொடுத்து “இனி நீங்கள் நிற்கவேண்டாம் உட்காரலாம்” என்கிறார். இது முகநூலில் வந்த காட்சிப் பதிவு.
ஆம் கேரள அரசு துணிக்கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு அமர ஒரு இருக்கை தரவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. உட்காருவது பெரிய விசயமா? எனத் தோன்றக்கூடும். தொடர்ந்து நின்று கொண்டு இருப்பவர்களுக்குத்தான் உட்காருவதில் இருக்கும் வசதி, கௌரவம், வலியின்மை ஆகிய அனைத்தும் தெரியும். எத்தனையோ முறை முன்பதிவில்லாமல் பயணம் சென்றுள்ளேன். அது போலவே பேருந்தில் சென்னை வரை நின்றே பயணம் செய்துள்ளேன். அப்பொழு தெல்லாம் உடலை தாங்கிய பாரத்தில் கால்கள் கெஞ்சும். உட்கார ஒரு சிறிய இடம் கிடைத்துவிடாதா என ஐம்புலன்க ளும் விழித்தபடி காத்திருக்கும். சக மனிதர்களை நிற்க வைத்து ரசிப்பது அதிகார குணம். வீடுகளில் மட்டுமல்ல, திரைப்படங்களிலும், பெண்கள் நின்று கொண்டிருந்தது ஒரு காலம். அந்த நிலை மாறிவிட்டது.
ஆனாலும், கார்ப்பரேட் வணிகம் துணிக்கடைகளில், நகைக்கடைகளில், எலக்ட்ரானிக் கடைகளில், செருப்பு கடைகளில் என எல்லா இடங்களிலும் பெண்களை நிற்க வைத்தே வேலை வாங்குகிறது. குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் எதிர்த்து பேச மாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள் என்பது மட்டுமல்ல. 8 மணிநேரமும் நின்றபடி வேலை செய்வார் கள் என்பது தான் பெண்களை பணிமர்த்தும் ரகசியம். கடை ஒன்றில் வேலை செய்யும் லீலாவதி என்ற இளம் பெண்ணிடம் கேட்டேன். இப்படி 8 மணிநேரம் நிற்கிறார்களே, உடம்புக்கு என்னாகும் என்று.
“பலமணி நேரம் தொடர்ந்து இருப்பதால் “வெரிகோஸ்” வர வாய்ப்புள்ளது. கால்கள் வீங்கும், நரம்புகள் பாதிக்கப்படும். உடலின் கீழ்பகுதி கடுமையாக பாதிக்கப் படும். மாத விடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத் தோடு உடல் நிலையும் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீர் கழிப் பதை அடக்குவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படக்கூடும்” என அடுக்கிக் கொண்டே போனார்.
சில கடைகளில் வாடிக்கையாளர்கள் உட்கார நாற்காலி உண்டு. நாமும் உட்காருவோம் என்று அப்பொழு தெல்லாம் துணி வண்ணத்தை, டிசைனை மட்டுமே கவனிப்போம். ஆனால் துணியை உருவாக்கிய நெச வாளியை கவனிப்பதில்லை. நமக்கு துணியை எடுத்து விரித்துப்போடும் அந்த பெண்களின் வலிகளை கவனிக்கத் தவறி விடுகிறோம். கடைக்குள் நுழைகிறோம். மூன்று பெண்கள் வரிசையாக நின்று வணக்கம் சொல்கி றார்கள். நாம் பதிலுக்கு வணக்கம் கூட சொல்லாமல் அலட்சியமாக கடைக்குள் நுழைகிறோம். அந்த வணக்கத்தில் அன்பின் சிறு ஈரமும் இருப்பதில்லை. அது 8 மணிநேரம் நின்றபடி வைக்கும் வலி வணக்கம். “வரலாற்றில் நின்றுகொண்டிருந்தவர்களை உட்கார வைக்கவும், சிறிது ஓய்வெடுக்க வைக்கவும் நின்றபடி முழங்கினார்கள் - போராடினார்கள்.” கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர். அவரது ஒரு கையெழுத்து பெண்களின் வலியை துடைத்து இருக்கிறது.
தமிழகத்தில்...
தமிழகத்திலும் நம்பிக்கை துளிர்விட தொடங்கி யுள்ளது. ஒளிக்கீற்று தெரிகிறது. மாநிலத் தொழிலாளர் ஆலோசனை வாரியத்தின் 68ஆவது கூட்டம் 04.09.2019 அன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்றது. அரசு தரப்பு பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், வேலை அளிப்போர் பிரதிநிதிகள், தொழிற்சங்க தரப்பு பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) சார்பில் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாரன் பங்குகொண்டார். இக்கூட்டத்தில் வரிசை எண் 3.1ல் 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும நிறுவ னங்கள் சட்டம் / விதிகள் பணியாளர்களுக்கு இருக்கை வசதி தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
பல்வேறு கட்ட விவாதத்திற்கு பின் கேரள மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்பிரிவு 21(B)-ல் பணியின்பொழுது பணியாளர்கள் அமர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், அவ்வாறே தமிழ்நாட்டிலும் தொழிலாளர்களுக்கு பணியின்பொழுது பணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியிடத்தில் அமருவதற்கு ஏதுவாக தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யவேண்டுமென்றும் கூடுதல் தொழிலா ளர் ஆணையர் (நிர்வாகம்) பரிந்துரைந்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் இச்சட்ட திருத்தத்தினை வரவேற்பதாகவும், இதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். கூட்டத்தில் இறுதியில் வாரியத் தலைவர் அவர்கள் 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் பணியிடத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைப்பது தொடர்பாக திருத்தங்கள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்காக இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) நடத்திய தொடர் போராட்டங்கள் நடத்தியது. அதன் அகில இந்திய மாநாட்டின் அறைகூவலின்படி 2020 மார்ச்6ல் உழைக்கும் பெண்கள் நடத்திய இயக்கத்தில் இக்கோரிக்கை நிறைவேற வலுவான குரல் எழுப்பப்பட்டது. தற்போது பணி யிடத்தில் உட்காரும் உரிமை அரசின் நிர்வாக மட்டத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.எனவே தமிழக அரசும், தொழிலாளர் துறையும், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில்/விதிகளில் பணியிடத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைப்பது தொடர்பாக திருத்தங்கள் கொண்டு வாருங்கள். பெண்கள் இனியேனும் இருக்கை யில் உட்காரட்டும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்,
மதுரை ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன்.