tamilnadu

img

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர், ஜூன் 12- 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனி சாமி  ஜூன் 12 வெள்ளியன்று  காலை 10 மணிக்கு  அணையைத் திறந்து வைத்தார்.  மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் வறண்டு காணப்படும். கடைசியாக 2011 ஆம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதத்தில் குறு வை சாகுபடிக்காக அணை திறக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் நிரம்பியிருந்த காரணத்தால் ஜூன் 12-ல் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி  மேட்டூர் அணையைத் திறந்துவைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

‘டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. இதனால் மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதன் மூலம் 3.25 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்ந்து 300 நாட்களுக்கு நீர் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். 120 டிஎம்சி தேவைப்படும் நிலையில் 100 டிஎம்சி தண்ணீர் அணையிலிருந்தும், எஞ்சிய நீர் மழை, நிலத்தடி நீர் வாயிலாகவும் பெறப்படும்.

மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடங்கி யுள்ள இடங்களுக்கு 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் செயல்பட உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண் இலவசமாக அள்ள பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு முக்கொம்பு மேலணை உடைப்பை சீர் செய்ய ரூ.38 கோடி ஒதுக்கினோம். கொள்ளிடம் குறுக்கே புதிய கதவணை ரூ.428 கோடி  மதிப்பில் பணி தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. ரூ. 650 கோடி மதிப்பில் கீழணை கட்ட ஆய்வு நடக்கிறது. காவிரி டெல்டா பகுதியில் கட்டுமானங்களைச் சீரமைக்க ரூ.5,400 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. தஞ்சை புதுக்கோட்டை கல்லணையைச் சீரமைக்க 2000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் தூர்வார 62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதனால் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு நீர் கிடைக்கும். 67.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இந்த ஆண்டு சுமார் 3,425 கிலோமீட்டர்  தூர்வாரும் பணியில் 80 சதவீதப் பணிகள் முடிந்தன. 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேலை துரிதமாக நடந்து முடிந்துள்ளது.

குடிமராமத்துப் பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கி 1919 ஏரிகள் தூர்வாரப் பட்டன. 4 ஆண்டுகளில் ரூ.6228 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 4565 ஏரிகள் தூர் வாரும் பணிகள் நடந்துள்ளன. ஊரக வளர்ச்சித் துறை மூலம் 5000 ஏரிகள் தூர்வாரப்பட்டு அதிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது’. இவ்வாறு முதல்வர்  தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், சேலம் ஆட்சியர் ராமன் உள்பட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.