tamilnadu

img

வனத்துறையினர் தடையால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார்சாலை பணிகள்

கடமலைக்குண்டு,ஆக.28- வருஷநாடு கிராமத்தில் இருந்து முருக்கோடை, தும்மக்குண்டு வழியாக வாலிப்பாறை கிராமம் வரையிலான  தார்சாலை சேதமடைந்துவிட்டது. அதேபோல் முருக்கோடை கிராமத்தில் இருந்து காமராஜபுரம் வரையிலான தார்சாலையும் சேதமடைந்துவிட்டது. இதையடுத்து கடந்தாண்டு புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்தது.  புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக பழைய தார்சாலை அகற்றப்பட்டு மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும்  பணிகளுக்கு வருஷநாடு வனத்துறை தடை விதித்தது.  இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் வனத்துறையினருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பிரச்சனைக்குரிய பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. சாலை அமைக்கப்படாத பகுதிகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வருஷநாடு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் சாலை போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறும் நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.