நீலகிரியில் உலவும் ஆட்கொல்லி புலியைக் கொல்ல வேண்டாம் என வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து புலியை வேட்டையாடி பிடிக்கத் தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்தியக் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை சார்பில், புலியைக் கொல்லும் திட்டம் இல்லை என்றும், உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், புலியின் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
மேலும், புலியைப் பிடிக்கும் போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும், புலியைப் பிடித்த பிறகு அதற்கு உரியச் சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.