அரசமைப்புச் சட்டத்தில் அதிக எண்ணிக்கையில் திருத்தங்களைக் கொண்டு வந்த நாடு, உலகி லேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும். 120க்கு மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தாலும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் விஞ்சி நிற்கின்றன. மாநிலங்களின் உரிமை கள் படிப்படியாகத் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசு ஒரு சர்வாதிகார அரசாக மாறி வருகிறது. இதற்கு ஆண்ட காங்கிரசும், ஆளும் பாஜகவும் கடைப் பிடித்த, நடைமுறைப்படுத்திய திட்டங்களும், திருத்திய சட்டங்களும் சாட்சியங்களாக அமைகின்றன. உலகமயமாதல் திட்டம் 1990-ஆம் ஆண்டில் நடை முறைக்கு வந்த பிறகு தான் பல நாடுகளில் போர்கள் பெருகின. குற்றங்களும், பயங்கரவாத செயல்களும் அன்றாட நிகழ்வுகளாகின.
1999-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மன்றத்தால் வெளியிடப்பட்ட மானுட மேம்பாட்டு அறிக்கையில் உலகமயமாதலும், பெருகிவரும் குற்ற நடவடிக்கைகளும் (Globalization and Criminalization) என்ற தலைப்பில் சில முதன்மையான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. “குற்றவாளிகள்தான் உலகமயமாதலின் பயன்களைப் பெற்று வருகின்றனர். கட்டுப்படுத்தப்படாத மூலதன சந்தை தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள், குறைந்த செலவில் போக்குவரத்து வசதிகள் ஆகியன தடையற்ற வகையில் போதைப் பொருள் சந்தை வணிகத்தைப் பெருக்கி வருகிறது. ஆக்கப்பூர்வமான புத்தகங்கள், வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான விதைகளுக்கு மாற்றாக, கறுப்புப் பணமும், ஆயுதங்களும் எளிதாகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
“பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஆண்டு தோறும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும், இளம் பெண்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே கடத்தப்படுகின்றனர். ரூ.31,500 கோடி அளவில் நடைபெறும் இவ்வகை சட்ட விரோத செயல்களால் மனித உரிமை மிகக் கொடுமையான முறையில் பறிக்கப்பட்டு பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இணைய தள தொழில் நுட்பங்கள் இவர்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. 1995இல் மட்டும் உலக வணிகத்தில் 8 விழுக்காடு அளவிற்கு மேற்குறிப்பிட்ட சட்ட விரோத வணிகத்தின் பங்கு உயர்ந்துள்ளது. “பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக, இவ்வகை குற்ற நடவடிக்கைகள் வழியாக வரும் வருமானம் ரூ.67 லட்சம் கோடியைக் கடந்து குற்றவாளிகளின் ஆதிக்கம் ஒரு சக்தி வாய்ந்த மையமாக வளர்ந்து வருகிறது.
பன்னாட்டு அளவில் குற்றங்களை நடத்தி வரும் இத்தகைய கும்பல்கள், அரசியலை, வணிகத்தை, காவல் துறையை இணைய தளத்தைத் திறன்மிக்க வகையில் பயன் படுத்தி, தங்களின் குற்ற நடவடிக்கைகளின் எல்லையை மிகஆழமான முறையில் விரிவுப்படுத்தி வருகின்றன. உலகத்தில் முதலாளித்துவ அமைப்பு செல்வாக்கு பெறுகிற நாடுகளில் இது போன்ற குற்றநடவடிக்கைகளும் பெருகும் என்பதை அறிஞர் மார்க்ஸ் மூலதனம்-முதல் தொகுதியில் இறுதி பகுதியில் 19-ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டுள்ளார். 21-ஆம் நூற்றாண்டில் முதல் 19 ஆண்டுகளைக் கடந்து விட்ட வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் மக்களிடையே காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் பெரும் அளவில் என்றும் இல்லாத வகையில் பெருகி வருகின்றன.
2019 ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு அறிக்கை இந்தியா உட்பட 188 நாடுகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை விளக்கி இன்னும் மூன்று மாதங்களில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட உள்ளது. அப்போது இன்னும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நாட்டின் வளங்களைக் கையகப்படுத்த ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நடைபெறும் போட்டியில் பெற்று எடுத்த குழந்தை தான் இந்த பயங்கரவாதம். ஆப்கானிஸ்தான், ஈரான், இராக், சிரியா நாடுகளில் நடை பெறும் போர்களை ஆய்ந்தால் இந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மத தீவிரவாத நடவடிக்கைகள் எப்பொழுது வலிமை பெற்றன? பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் நடந்த அப்பாவி இஸ்லாமி யர்கள் மீது தாக்குதல்கள், கொலைச் செயல்கள், ஒரிசாவில் கிருத்துவ பாதிரியார் பச்சிளங் குழந்தைகளோடு எரிக்கப்பட்ட கொடும் செயல் ஆகியன மத தீவிரவாதத்திற்கு வித்திட வில்லையா?
மாலேகான் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது யாரால்? இறந்தவர்கள் இந்தியர்கள் தானே! நீதிமன்றத்தில் கொலைக் குற்ற வழக்கு முடிவடையா மல் இருக்கும் போது பெண் சாமியார் பிரக்யாசிங்குக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தது பயங்கரவாதத்திற்கு துணை போகும் செயல் தானே? இதற்கு உறுதுணையாக நின்றது கட்சித்தலைவர் அமித்ஷாவா? பிரதமர் மோடியா? மராட்டிய மாநிலத்தில் மருத்துவர் நரேந்திர தபோல்கர், எழுத்தாளர்பன்சாரே, கர்நாடக மாநிலத்தில் அறிஞர்கள் கல்புர்க்கி, திருமதி கவுரி லங்கேஷ் ஆகியோரைப் பட்டப் பகலில் சுட்டு வீழ்த்தியது இந்து தீவிரவாதிகள் தானே, இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒன்றிய அரசில் பாஜக அரசு அமைந்த பிறகு தானே நடைபெற்றது. பொருளாதாரக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை களை எடுக்கத்தானே மிசா சட்டம் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 1970 களில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் தவறாக அரசியல் தலைவர்கள் மீது பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று மறைந்த திமுகத் தலைவர் அண்ணன் மாறன் நாடாளுமன்றத்தில் பேசியபோது, குறுக்கிட்டு பேசிய பிரதமர் இந்திரா காந்தி,எக்காரணம் கொண்டும் இந்த மிசா சட்டம் அரசியல் தலைவர்கள் மீது பயன்படுத்தப்படாது என்று கொடுத்த வாக்குறுதி இறுதியாக என்னவாயிற்று.
முதலில் ஹாஜி மஸ்தான் போன்ற கடத்தல் பேர்வழிக ளைக் கைது செய்ய மிசா சட்டம் பயன்படுத்தப்பட்டது. பின்பு,1975 ஆம் ஆண்டு மாபெரும் விடுதலைப் போராட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் மீது அல்லவா மிசா சட்டம் பயன்படுத்தப்பட்டது. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், அண்ணன் மாறன், இன்றைய திமுகவின் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மனித உரிமை மீறல், கொடுங்கோண்மை என அனைத்துக் கூறுகளையும் ஒன்றாக அடக்கிய ஒரு சட்டம் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியில் 1919 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தைக் கண்டித்து ஜாலியான் வாலா பாக்கில் திரண்ட கூட்டத்தில் படுகொலைகள் நடந்தேறின. அது தானே ரெளலட் கொடுங்கோண்மைச் சட்டம். அந்தச் சட்டத்தின் மறுபிறவிகள் தான் மிசா, தடா, பொடாச் சட்டங்கள். இத்தகைய ஜனநாயக விரோத சட்டங்களின் புதிய கொடு மையான முகம் தான் 2008 இல் கொண்டு வரப்பட்ட தேசிய புலனாய்வு முகமைச் சட்டம் ஆகும். அப்போது கடுமையாக எதிர்த்தவர்கள் யார் யார் தெரியுமா?
அன்றைய குஜராத் முதல்வர், இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செல்வி.ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் உட்பட 9 மாநில முதல்வர்கள் இச்சட்டம் மாநில உரிமைக ளைப் பறிக்கிறது. கூட்டாட்சி முறையைக் குழிதோண்டிப் புதைக்கிறது என்று குறிப்பிட்டார்கள். பிரதமர் மன்மோகன்சிங் காலத்திய 2008 ஆம் ஆண்டு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள் துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்துள்ளார். பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கள்ளப்பணம் அச்சடித்துப் புழக்கத்துக்கு விடுதல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கடத்துதல், இணையத்தள சுழியக் குற்றங்களைச் செய்தல், வெடி குண்டுகளை எடுத்துச் செல்லுதல் ஆகிய தீவிரவாதச் செயல்களைத் தடுப்பதற்கான திருத்தங்களை மட்டும் உள் துறை அமைச்சர் தனது உரையில் குறிப்பிடவில்லை. அணு சக்தி எதிர்ப்பாளர்கள், தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 1999ஆம் மனித மேம்பாட்டு அறிக்கையில் சுட்டப்படுகிற குற்றங்கள் பன்மடங்கு பெருகி வருவது உண்மை. ஆனால் அக்குற்ற செயல்களைச் செய்பவர்கள் அவ்வறிக்கையில் கூறப்பட்டது போல அரசியல் தலைமை யோடு கூட்டணி வைத்துக் கொண்டு தான் எல்லா நாடு களிலும் செயல்படுகிறார்கள். நீரவ் மோடி, மல்லையாக்கள் தப்பிய நிகழ்வுகள் இதற்குத் தக்கச் சான்றுகள்.. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சுயாட்சித் தன்மை கொண்ட இந்திய மைய வங்கி, தேர்தல்ஆணையம், நீதிமன்றங்கள் ஆகியன எப்படி அடி பணிந்து போகின்றன, போக வைக்கப்படுகின்றன என்பதை நாம் காண்கிறோம். எனவே, தேசிய புலனாய்வு முகமை 2008 சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், அரசியல் பழித் தீர்ப்பதற்குக் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு மிசா, தடா, பொடா சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியமையே முன்னுதாரணங்களாக அமைகின்றன. வாழ்க ஜனநாயகம்! வாழுமா ஜனநாயகம்? எப்படி?