மதுரை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக வாழை விவசாயிகள் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். மதுரை தோப்பூர் அருகே உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தில் வாழை விவசாயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிலையூர் கண்மாயின் கீழ்புறத்தில் வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் விளையும் பல ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளன. வாழைப்பழம், வாழைக்காய், இலை, தண்டு, பூ ஆகியவற்றை செய்துவருகிறார்கள். தற்போது முழு ஊரடங்கு உத்தரவால் தொழில் வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழை விவசாயிகள் உள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பு
பாதிப்பு குறித்து கூத்தியார் குண்டு பகுதியை சேர்ந்த விவசாயி சோலைமலை என்பவர் கூறுகையில், வாழையும், நெல்லும்தான் எங்கள் கிராமத்தின் பிரதான விவசாயம். தற்போது மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஏறக்குறைய 200 ஏக்கரில் வாழையை மட்டும் பயிர் செய்துள்ளோம். விளைந்து பருவத்திற்கு வந்துள்ள நேரத்தில் முற்றிலுமாக நஷ்டப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்கிறார்.
இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் மண்ணை நம்பிப் பிழைக்கின்றவர்கள் ஆவர். வட்டிக்கு பணம் வாங்கி பயிரிட்டுள்ள வாழைப்பயிரால், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எவ்வாறு தாங்கிக் கொள்ளப்போகிறோம் என்ற பயமும், அதிர்ச்சியும் அவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
அரசே கொள்முதல் செய்திடுக
அதே ஊரைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் வடிவேலன் என்பவர் கூறுகையில், 'நாளொன்றுக்கு சராசரியாக வாழைக்கட்டுகள் ஆயிரம் எண்ணிக்கையில் மதுரை சந்தைக்கு செல்லும். வார வருமானமாக ஒவ்வொரு வாரமும் சராசரியாக ரூ.7 ஆயிரம் கிடைக்கும். இதுநாள் வரை மிக சரியாக சென்று கொண்டிருந்த இந்த விவசாயம், தற்போதைய ஊரடங்கு உத்தரவின் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வா, சாவா என்ற விளிம்பு நிலைக்கு வாழை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அரசு தருகின்ற ஆயிரம் ரூபாய் நிதியை வைத்துக் கொண்டு எப்படி வாழ முடியும்..? இங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது விளைந்துள்ள முழு வாழையை அவர்களே கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வாழ்வு தர வேண்டும்' என்கிறார்.
திருமணம், கோவில் விழாக்கள்,வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட விழாக்களில் வாழை இலையின் தேவை மிக அதிகம். ஊரடங்கால் இந்நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் வாழைகளை விற்க முடியவில்லை. வாழைமரத்திலிருந்து இலைகளை வெட்டாமலும், வாழைக்குலையை அறுக்காமலும் அப்படி அப்படியே போட்டு வைத்துள்ளனர். பெரும்பாலான தோப்புகளில், வாழை சாய்ந்து குலைகள் கீழே விழுந்துகிடப்பதைக் காண முடிகிறது. தற்போது மதுரை மண்டல வேளாண் இணை இயக்குநர், விளைந்த வாழைகளை விற்பனைக்குக் கொண்டு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதி செய்து தரவிருப்பதாக உறுதியளித்துள்ளார் என்று விவசாயிகளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதும் விவசாயிகளின் அச்சமாக உள்ளது.
அதிகாரிகள் தொடர்புகொள்ளவில்லை
மற்றொரு வாழை விவசாயியான குருமூர்த்தி என்பவர் கூறுகையில், 'தற்போதைய சூழலில் ஹோட்டல்கள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. பார்சல்களுக்காக இலைகளைப் பயன்படுத்த அரசு அறிவுறுத்தலாம். பிளாஸ்டிக் ஒழிப்புப் பணிக்கும் அது உறுதுணையாக இருக்கும். வாழைக்காய்களை அரசே கொள்முதல் செய்து, அனைத்து மக்களுக்கும் வழங்க ஆவன செய்யலாம். 750 ரூபாய்க்கு விற்கக்கூடிய வாழைத்தாரை ரூ.100க்கு எடுத்துச் சென்றால்கூட ஏற்புடையதுதான். இதுகுறித்து தமிழக அரசின் சார்பாக இதுவரை எந்த அதிகாரிகளும் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை' என்கிறார். விவசாயிகள் துயரத்தைப் போக்கிடுக
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை விவசாயிகள் விளைவிக்கும் விவசாய பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க கோரி சங்கத்தின் சார்பில் தொடர்போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் வாழை விவசாயம் சுமார் 5ஆயிரம் முதல் 6ஆயிரம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளது. சாதாரணமாக வாழைத்தார் ரூ.400 முதல் 500வரை காய்களாகவே விற்பனை செய்ய்யப்படும்.தற்போது ரூ.100க்கு கூட வாழைத்தாரை எடுக்க மறுக்கிறார்கள். தற்போது திருமணம் மற்றும் மற்ற சுபகாரியங்கள் எதுவும் நடக்காத நிலையில் அதேபோல் உணவங்களிலும் பார்சல் மட்டுமே கொடுக்க அனுமதி இருப்பதால் வாழை இலையும் விற்க முடியாமல் நிலத்திலே கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் நிலைமையை கவனத்தில் எடுத்துக்கொண்டு தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் வாழை விவசாயிகளின் துயரத்தை போக்கும் வகையில் அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமின்றி கட்டுப்படியான விலை கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பா.ரணதிவே