காவிக் கும்பல்கள் மீது இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 22 - தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலை மையிலான அணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக சங்பரிவாரம் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்லத்தையும், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவையும் சமூக வலைதளங்களில் சங்பரிவார கும்பல் அவதூறு செய்தது. அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யக்கோரி சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் 2 புகார் அளித்துள்ளார். அதன்மீது எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் அவதூறு பிரச்சாரம் செய்வோரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பாலன் இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இரா.முத்தரசன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இரா.முத்தரசன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் பெரி யார் சிலைகளை சேதப்படுத்துவது, தலை வர்களை இழிவுபடுத்துவது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர் பாக 2 புகார்கள் கொடுத்தும் காவல்துறை யினர் சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் உள்ளனர் என்றார். மத்தியில் தங்களது ஆட்சி, மாநிலத்தில் அடிமை ஆட்சி நடப்பதால் காவல்துறை தங்களை ஒன்றும் செய்யாது என்ற துணிவில் காவிக்கும்பல்கள் அருவருக்கத்தக்க அரசியலை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள். 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை உணர்ந்து, மதக்கல வரம், சாதிக்கலவரம், கடவுள் பெயரால் சண்டைகளை உருவாக்க முயற்சிக்கிறார் கள். இதனை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போராட்டம் தொடரும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், கொரோனா பரவலை தடுக்க மார்ச் 24ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கும்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் 544 பேர். இறந்தவர்கள் 10 பேர். தற்போது பாதிப்பு 11.50லட்சத்தை கடந்துள்ளது. 28ஆயிரம் பேர் இறந்துள்ள னர். இதுபோன்ற தோல்விகளை திசை திருப்ப மத்திய - மாநில அரசுகள் சதி செய்கின்றன என்றார். ஆர்எஸ்எஸ், பாஜக புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அளித்த 2 புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்க மறுப்பது ஏன்? புகார் மீது நட வடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சி.மகேந்திரன், டி.எம்.மூர்த்தி, எஸ்.ஏழுமலை (சிபிஐ), கலி.பூங்குன்றன் (திக), ஏ.பாக்கியம் (சிபிஎம்), வன்னிஅரசு (விசிக), உ.பலராமன் (காங் கிரஸ்), குன்னக்குடி அனீபா (மமக) உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கே.பாலகிருஷ்ணன்
சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் யாழ்திலீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை கீழ்தரமாக சித்தரித்த பாஜக, சங் பரிவார் கும்பல்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் செயலை பாஜக மற்றும் சங்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. சிபிஐ தலைமை அலுவலகத்தை கீழ்த்தரமாக பதிவு செய்தவர்கள் மீது புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனி மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைவரும் ஒருங்கிணைந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் நிலை ஏற்படும் என்றார்.