வாழ்வாதாரம் இழந்து,நிர்க்கதியாய் நிற்கும் முந்திரி ஆலைத் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட முந்திரி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் பி.சிங்காரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளார். அந்த மனு விபரம் வருமாறு,
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி,கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் முந்திரி ஆலைத் தொழில் உள்ளது. சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 95சதவீத தொழிலாளர்கள் கிராமப்புற ஏழை பெண் தொழிலாளர்கள் ஆவார்கள். முந்திரி தொழில் மூலம் மத்திய_மாநில அரசுகளுக்கு பல கோடி அன்னிய செலவாணியை ஈட்டித் தருகிற தொழிலாக உள்ளது. இத்தொழில் சமீப சில ஆண்டுகளாக நலிவுற்ற நிலையில், தொழிலாளர்களும் கஷ்டங்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது கொரானா வைரஸ் நோயின் தாக்கத்தால் அனைத்து முந்திரி ஆலைகளும் மூடிய நிலையில் உள்ளது.
அன்றாடம் கிடைக்கும் சொற்ப ஊதியத்தை வைத்து வாழ்க்கையை கழித்து வந்த இத்தொழிலாளர்கள் தொடர் வேலை இழப்பு காரணத்தால் வாழ வழியின்றி வாழ்வாதாரம் இழந்து அல்லல்படும் நிலையில் உள்ளனர். மேற்படி தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக முதல்வர் ,தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச மாத ஊதியத்தினை மீண்டும் முந்திரி ஆலைகள் திறந்து செயல்படும் வரை, முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து உதவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் வேலை இல்லாத காலத்திற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ திட்டங்களுக்கான தொழிலாளர்களின் பங்களிப்புத் தொகையினை முழுவதும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்க கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.