tamilnadu

img

‘விடுதலை’ ஏட்டின் 85 ஆம் ஆண்டு விழா

சென்னை, ஜூன் 3-விடுதலை நாளிதழின் 85 ஆம் ஆண்டுவிழா சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது ‘விடுதலை’ எனும் போர்வாள் கலைநிகழ்ச்சியை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கிவைத்தார். கலைநிகழ்ச்சியில் விடுதலை நாளிதழ் தொடர்பான பல்வேறு வரலாற்றுப் பூர்வமான நிகழ்வுகள் இடம்பெற்றன.

பட்டிமன்றம்
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனை நடுவராகக் கொண்டு ‘விடுதலை’யின் சாதனைகளில் விஞ்சி நிற்பது சமூகநீதியே, பகுத்தறிவே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்க உரையாற்றினார். விடுதலை ஆசிரியர் கி.வீரமணியுடன்  சந்திப்பு நிகழ்ச்சியில் விடுதலை நாளிதழின் வாசகப் பார்வையாளர்கள் அளித்த கேள்விகளுக்கு ஆசிரியர்  விரிவாக பதில் அளித்தார். ஆசிரியர் அவர்களின் முதல் தலையங்கம் குறித்தும், தமிழன் இல்லம் என்பதற்கான அடையாளம் விடுதலை நாளிதழ் எனும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அறிவுறுத்தல்குறித்தும், தந்தை பெரியார் மருத்துவ மனையில் இருந்தபோது ஆசிரியர் அவர்களிடம் விடுதலை பொறுப்பை அளித்தது குறித்தும் அவர் விரிவாக பதில் அளித்தார். ஆசிரியருடன் சந்திப்பைத் தொடர்ந்து ‘விடுதலையின் பயணம்’ காணொலி திரையிடப்பட்டது. அக்காட்சிப்பதிவில் விடுதலை வளர்ச்சி பெற்ற பரிணாமங்கள், விடுதலையின் சாதனைகள், வரலாற்றில் விடுதலை எதிர்கொண்ட சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தா.பாண்டியன் உரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் விடுதலை இதழின் சிறப்புகள், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகம் ஆற்றிய பணிகள்குறித்து அவருக்கே உரித்தான நடையில் தெள்ளத்தெளிவாக உறுதிபட உரையாற்றினார்.

திராவிட இயக்க இதழியல் கருத்தரங்கம் 
திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தலைமையில் திராவிட இயக்க இதழியல் கருத்தரங்கம் நடைபெற்றது. ஊடகவியலாளர்கள் நக்கீரன் கோவி.லெனின், தீக்கதிர் அ.குமரேசன், ஆளூர் ஷாநவாஸ், ஃபிரண்ட்லைன் இரா.விஜயசங்கர் ஆகியோர் உரையாற்றினர். 

விடுதலை சிறப்பிதழ் வெளியீடு
விழாவில் விடுதலை 85ஆம் ஆண்டு விழா சிறப்பிதழ் தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட   பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் பெற்றுக் கொண்டார். 

விடுதலை விருது வழங்கும் விழா
விடுதலை விருது வழங்கும் விழாவில் 96 வயதாகும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கவிக்கொண்டல் இதழாசிரியர் மா.செங்குட்டுவன், முகம் இதழாசிரியர் முகம் மாமணி ஆகியோருக்கு விடுதலை விருது வழங்கி கி.வீரமணி சிறப்பித்தார். விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளிதழின் சார்பில் விருது பெற்றவர்களுக்கு் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து, விடுதலை ஏடு கண்ட களங்கள், சந்தித்த சோதனைகள், சாதித்த சாதனைகளை சுருக்கமாகப் பேசினார்.திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.இராமசாமி வாழ்த்திப் பேசினார்.