உதகை,ஜன.23- மணியாபுரம் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடி விணாவதால் குடிநீரின்றி கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட மணியாபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு துருப்பிடித்து உடைந்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு இங்கு வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்யாத காரணத்தினால் பல ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் தேங்கியிருந்த குடிநீர் அனைத்தும் வீணாக சாலையில் ஓடியது. இதன் காரணமாக கடந்த 5 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தின் அதிகரட்டி, பிக்கோல், நெடிகாடு, தேவர்சோலை ஆகிய பகுதியின் வழியாக ஆறு ஒன்று ஓடுகிறது. இந்த ஆற்றின் இரண்டு பகுதிகளிலிலும் தடுப்பு அணை கட்டப்பட்டு அதிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பகுதிகளில் உள்ள கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது. இந்த மாசடைந்த தண்ணீரைத்தான் நாங்கள் குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் வைத்து பயன்படுத்த முடிவதில்லை. எனவே இந்த ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குடிநீர் குழாயை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.