நீலகிரி மாவட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சமீப காலமாக எச்.எம்.பி.வி எனப்படும் தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருவதால், நோய்ப் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் இருவருக்கு எச்எம்பி தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக எல்லையையொட்டி நீலகிரி மாவட்டப் பகுதிகள் அமைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நோய்த் தொற்றால் உடலில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ள போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.