உதகை, ஜூன், மே 3-குழந்தைகளின் படிப்பு செலவிற்காக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெ.இன்னசென்ட்திவ்யா தலைமையில் திங்களன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும்கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 177 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து அவற்றைப் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் கோத்தகிரி கஸ்தூரிபா நகர் பகுதியை சேர்ந்த கஜேந்திரகுமார் என்பவரின் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையினையும், கூடலூர் வட்டம் ஓவேலி பகுதியை சேர்ந்த பழனிவேல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தமைக்காக அவரது தங்கை விஜயகுமாரிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஓரு லட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இக் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டடம்) கண்ணன், உதவி இயக்குநர் (கலால்) பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.