கோவை மற்றும் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை மற்றும் நீலகிரியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் 82 செமீ மழை கொட்டித் தீர்ந்தது. இதையடுத்து தொடர்ந்து இன்றும் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியின் பல பகுதியில் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பல பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளனர்.