tamilnadu

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றத்திற்கு சிஐடியு கண்டனம்

உதகை, மே 23-நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் உள்ளூர் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் கோடைவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டத்தில் இயங்கி வந்தஅரசு போக்குவரத்து கடந்த ஒரு மாதகாலமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலையில் இயங்கி வந்த பேருந்துகளை மேட்டுப்பாளையம், கோவைபோன்ற சமவெளிப்பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.இதனால் மலைக் கிராம, ஆதிவாசி காலனி மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகியுள்ளனர். உரிய நேரத்திற்கு பணிகளுக்குச் செல்ல முடியவில்லை. அஞ்சல் பட்டுவாடா பாதிக்கப்பட்டது. கோடை விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு வெளி மாவட்டத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் நீலகிரியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் பேருந்துகளும் வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைத்து சுற்றுலா பயணிகளுக்காக இயக்கியிருக்கலாம். குறிப்பாக தமிழக ஆளுநர் குன்னூர் பகுதிக்கு வந்த போது பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில கிராமங்களில் ஈமச்சடங்கிற்கு சென்றவர்கள்கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, ஆளுநர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வரும் போது போக்குவரத்தை அதிக நேரம் நிறுத்தி வைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும்வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளார்.