tamilnadu

img

இந்நாள் நவம்பர் 14 இதற்கு முன்னால்

1886 - காகிதத்தில் துளையிடும் கருவியை உருவாக்கிய ஃப்ரீட்ரிச் சோனெக்கென் என்ற ஜெர்மானியர், அதற்கான காப்புரிமையைப் பதிவு செய்தார். பல்வேறு அலுவலகக் கருவிகளை உற்பத்தி செய்ய ஜெர்மனியின் வெஸ்ட்ஃபேலியாவில் 1875இல் இவர் தொடங்கிய எஃப்.சோனெக்கென் வெர்லாக் என்ற நிறுவனம் 1973இல் திவாலாகியதைத் தொடர்ந்து, ப்ரேனியான் இஜி என்ற நிறுவனம் இதனை வாங்கினாலும், இன்றும் சோனெக்கென் என்ற வணிகப் பெயரிலேயே அலுவலகக் கருவிகளை உற்பத்திசெய்கிறது.

இரட்டைத் துளையிடும் கருவியையும், ரிங் பைண்டர் என்றழைக்கப்படும் கம்பியில் ஆவணங்களைக் கோக்கும் கோப்பையும்(ஃபைல்) சோனெக்கென்தான் அறிமுகப்படுத்தினார். உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இம்முறையில் 6 மி.மீ. விட்டமுள்ள இரு துளைகள் 80 மி.மீ. இடைவெளியில் இடப்படுவது ஐஎஸ்ஓ 838 முறை என்றழைக்கப்படுகிறது. இத்துளைகளுக்கு இருபுறமும் 80 மி.மீ. இடைவெளியில் ஒவ்வொரு துளைகொண்ட 4 துளைக் கோப்பு முறையும் சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பெரும்பாலும் இந்த 4 துளைக் கோப்பு முறையே நடைமுறையிலுள்ள அமெரிக்காவிலும், கனடா, மெக்சிக்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும், மையத்தில் ஒரு துளையும், அதன் இருபுறமும் 108 மி.மீ. தொலைவில் ஒவ்வொரு துளையும்கொண்ட முத்துளைக் கோப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர 70 மி.மீ. இடைவெளியில் இரு துளைகளைக்கொண்ட முறையும் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ளது. இவற்றிலிருந்து மாறுபட்ட, 70 மி.மீ. இடைவெளியில் இரு துளைகளும், அவற்றிலிருந்து 21 மி.மீ. இடைவெளியில் ஒவ்வொரு துளையும் கொண்ட 4 துளைக் கோப்பு முறை, ஸ்வீடனின் தேசியக் கோப்புமுறையாக உள்ளது. இவை தவிர 9, 7 துளைகள் கொண்ட கோப்பு முறைகளும் சில இடங்களில் பயன்பாட்டிலுள்ளன. மிக அதிகமான தாள்களில் துளையிட பேப்பர் ட்ரில் எந்திரமும், பயணச்சீட்டு முதலானவற்றில் துளையிட ஒற்றைத் துளையிடும் கருவியும், தோல் பொருட்களில் மாறுபட்ட விட்டங்களுள்ள துளைகளையிடும் கருவியும் பின்னாளில் உருவாயின. சோனெக்கென்னுக்கு முன்பே துளையிடும் கருவி உருவானதாகக் கூறப்பட்டாலும், அவற்றைப் பற்றிய பதிவுகள் இல்லை. 2017 நவம்பர் 14ஐ துளையிடும் கருவியின் பிறந்த நாளாக டூடுல் வெளியிட்டு கூகுள் கொண்டாடியது. காலிக்ராஃபியில் வட்ட எழுத்துகள், அதற்கான நிப் உள்ளிட்ட வேறு பலவற்றையும் சோனெக்கென் உருவாக்கியுள்ளார்.

- அறிவுக்கடல்