tamilnadu

img

இந்நாள் ஜுன் 22 இதற்கு முன்னால்

1675 - கிரீன்விச் அரச வானியல் ஆய்வகம் தொடங்கவும், அதன் பொறுப்பாளராக அரச வானியலாளர் என்ற பதவிக்கு ஜேம்ஸ் ஃப்ளாம்ஸ்டீட் என்பவரை நியமிக்கவும், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அரசர் உத்தரவிட்டார். கடலில் பயணிக்கும்போது மாலுமிகள், தாங்கள் இருக்குமிடம், செல்லவேண்டிய தொலைவு உள்ளிட்டவற்றைக் கணக்கிட நிலவு முதலான வான்பொருட்களைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவற்றின் இடம்குறித்த தெளிவான தகவல்களைத் தருவதன்மூலம், அவர்களின் பயணத்திற்கு உதவுவதற்காகவே இந்த வானியல் ஆய்வகம் தொடங்கப்பட்டது.

நிலம், கிடங்குகள், கோட்டைகள் ஆகியவற்றைப் பராமரிப்பது ஆயுதத்துறையின் பணியாக இருந்தது. ராணுவம், கடற்படை ஆகியவற்றுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் பணியையும் கொண்டிருந்த இத்துறையின் தலைமைப்பதவியான தலைமை அளவையாளராக இருந்த ஜொனாஸ் மூர் முயற்சியிலேயே அரசர் இதனை உருவாக்கினார். ஏற்கெனவே அரசரின் வேட்டைக்கால அரண்மனை கிரீன்விச்சில் இருந்த இடத்தில் ஆய்வகம் உருவாக்கப்பட்டது. அகற்றப்பட்ட ஹம்ஃப்ரி கோட்டையின் பழைய பொருட்களையே பொரும்பாலும் பயன்படுத்திக் கட்டப்பட்ட இதன் கட்டுமானத்திற்கு 500 பவுண்டுகள் ஒதுக்கப்பட்டு, 520 பவுண்டுகள் செலவானது. இந்த ஆய்வத்தை நடத்துவதற்கான செலவுகளை ஆயுதத்துறை வழங்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டதன்மூலம், அரசின் நிதியில் இயங்கும் முதல் அறிவியல் அமைப்பாக இது மாறியது. பயன்படுத்தமுடியாத பழைய வெடிமருந்தினை விற்றுக் கிடைக்கும் நிதியையே இதற்கு ஆயுதத்துறை வழங்கிவந்தது.

அரச வானியலாளர், அவரது உதவியாளர், அவர்களின் குடும்பங்களுடன், அறிவியல் கருவிகள் ஆகியவை மட்டுமேகொண்டதாக, தொடக்கத்தில் இந்த ஆய்வகமிருந்து, பின்னாளில்தான் முழுமையான ஆய்வகமாக வளர்ச்சியடைந்தது. 1767இலிருந்து, வான்பொருட்களின் இடம் பற்றிய விபரங்களைக்கொண்ட கடற்பயண ஐந்தொகுதியை இந்த ஆய்வகம் வெளியிடத்தொடங்கியது. மாலுமிகள் மட்டுமின்றி, இங்கிலாந்தின் வானியலாளர்களும், கிரீன்விச் ஆய்வகத்தை மையமாகக்கொண்டே எல்லாவற்றையும் அளந்தனர். பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டிருந்ததாலேயே, 1884இல் வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு தீர்க்கரேகை மாநாட்டில், இது இருக்குமிடம் முதன்மை தீர்க்கரேகையாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டதுடன்(இத்தொடரில் 2017 அக்டோபர் 13இல் இடம்பெற்றுள்ளது), உலகின் நேரக்கணக்கீட்டிற்கான மையப்புள்ளியாகவும் மாறியது.