tamilnadu

img

இந்நாள் நவ. 26 இதற்கு முன்னால்

1977 - புவியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகள் குறுக்கிட்டு, எச்சரிக்கைச் செய்தியை ஒலிபரப்பியதாக நம்பப்பட்ட நிகழ்வு இங்கிலாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்தின் இண்டிபெண்டண்ட் பிராட்காஸ்ட்டிங் அத்தாரிட்டி(ஐபிஏ) என்ற ஒழுங்காற்று அமைப்பின் கட்டுப் பாட்டிலிருந்த ஹன்னிங்டன் ஒளிபரப்பு மையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த செய்தியறிக்கையில் மாலை 5.10 மணிக்கு இடையூறு ஏற்பட்டது. முதலில் படம் சற்றுக் குலுங்கியபின், குழப்பமான ஒலிகள் கேட்டு, ஒளிபரப்பின் ஒலி மட்டும், சிதைவுற்ற ஒலிக்கு மாறி, சற்றேறக்குறைய 6 நிமிடங்களுக்கு ஒரு கரகரப்பான குரலில் ஒருவர் பேசியது ஒலிபரப்பாகியது. தன் பெயர் வ்ரில்லியன் என்றும், அஷ்தார் பால்வீதி மண்டல பாதுகாப்புத்துறையின் பிரதிநிதி என்றும் அறிமுகப் படுத்திக்கொண்டார். வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கருதுகோள்களை உருவாக்கிய வர்களுள் ஒருவரான வான் டெசல், அஷ்தார் என்னும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி, முதன்முதலாக 1952இல் குறிப்பிட்டார்.

கலிஃபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களை(யுஎஃப்ஓ-பறக்கும் தட்டு!) சந்திப்பதற்கான தளம் ஒன்றை 1947இல் உருவாக்கிய இவர், 1952இல் அஷ்தார்களுடன் தொலையுணர்வின்மூலம்(டெலிபதி!) பேசியதாக அறிவித்ததைத்தொடர்ந்து இப்பெயர் புகழ்பெற்றது. இந்தப் பெயரைத்தான் தொலைக்காட்சி ஒளிபரப்பின் இடையில் ஊடுருவியவர் பயன்படுத்தினார். புவிக்கோளில் வசிப்பவர்களின் தவறுகளால் ஊழிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், அது பல்வேறு திருத்த நடவடிக்கைகளை புவியில் செய்து மனித இனத்தின் விதியை நிர்ணயிக்கும் என்றும், மனிதர்களின் தவறுகள் புவியைத் தாண்டித் தங்கள் கோள்களையும் பாதிக்கிற அழிவுகளை உருவாக்கத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்த அந்த உரை, அந்த அழிவுகளைத் தடுக்க, தீமையான ஆயுதங்கள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டும் என்றும் எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, அச்சமுற்ற மக்கள் ஏராளமான தொலைபேசி அழைப்புகளை ஒளிபரப்பு நிலையத்திற்குச் செய்ததால், மறுநாளின் செய்தித்தாள்களில், யாரோ ஒரு வதந்தி பரப்புபவர், ஒளிபரப்பியைக் கைப்பற்றி, வதந்தி பரப்பியதாகவும், இவ்வாறு நிகழ்வது அதுவே முதல்முறையென்றும்(!) ஐபிஏ விளக்கமளித்தது. உலகம் முழுவதும் பரவிய இந்தச் செய்தி அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

- அறிவுக்கடல்