குவைத் சிட்டி
வளைகுடா நாடுகளில் மற்ற நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வளைகுடா நாடுகள் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வருவதால் அங்குத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கித் தொடர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு மன்னர் சபா-அல்-அகமது முடிவு செய்துள்ளார்.
இது குறித்து குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் விசா முடிந்த பின்னரும் குவைத்தில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும், சொந்த நாட்டுக்குச் செல்ல அரசே விமான டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அவர்களது நாடுகளின் தூதர்களை அணுகலாம்" எனவும் எனக் கூறப்பட்டுள்ளது.