கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பாதிப்பின் விளைவாக, உலகின் பல நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக டிஜிட்டல்மயத்தை சார்ந்ததாக மாறப் போகிறது என்றும், செயற்கை நுண்ணறிவுத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குடிரஸ் கூறியுள்ளார்.
ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு - ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 9 லட்சம் பேரின் வேலைகள் பறிபோயுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் 950 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இது மார்ச் 27 அன்று இத்தாலியில் ஒரேநாளில் பதிவான 919 மரணங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் வரும் நவம்பரில் நடைபெற இருந்த ஐ.நா. காலநிலை மாற்ற மாநாடு கொரோனா பாதிப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் புதனன்று ஒரே நாளில் 563 கொரோனா மரணங்கள் பதிவாகின. அந்நாட்டில் இது ஒரே நாளில் நேர்ந்த அதிகபட்ச மரணம் ஆகும். இது மிக மிக துயரமான நாள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
வடகொரியாவில் கோவிட் 19 நோயால் ஒரு நபர் கூட பாதிக்கப்படவில்லை என்று வடகொரிய சுகாதாரத்துறை மூத்த அதிகாரி பாக் முயோங் சூ தெரிவித்துள்ளார். துவக்கத்திலேயே எல்லைகள் அனைத்தையும் மூடி நாடு முழுவதும் விரிவான பரிசோதனை மற்றும் சந்தேகத்திற்கிடமான சுகாதார நிலைமைகளை சரி செய்து நடவடிக்கை எடுத்துவிட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் விசா காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோவ் லிட்ஜ்மான் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனா கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் குறித்த எண்ணிக்கையை குறைத்து காட்டியிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அது எனக்கு தெரியாது. நான் சீனாவின் கணக்கு அதிகாரி அல்ல என்று கூறியுள்ளார்.
தென்கொரியாவில் ஏப்ரல் 11 அன்று 300 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு நோயாளிகள் இத்தேர்தலில் மருத்துவமனையில் இருந்தவாறே வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் யார் நடமாடினாலும் அவர்களை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ டுட்டெர்டே, கொடூரமான உத்தரவினை காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு கொரோனா பாதிப்பில் உதவி செய்ய ரஷ்யா ஏராளமான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. முன்னதாக டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகிய இரு ஜனாதிபதிகளும் பரஸ்பரம் தொலைபேசியில் உரையாடினர்.
உலகம் முழுவதும் கோவிட் 19 உறுதி செய்யப்பட்ட பாதிப்புகள் சில நாட்களில் 10 லட்சத்தை தாண்டிவிடும் என்றும், மரண எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிவிடும் என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையில் கொரோனா பாதிப்பால் உலக அளவில் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் தொழிற்சாலைகள் இயங்காத சூழல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும், நிலைமை சரியானவுடன் மீண்டும் அதே அளவுக்கு கரியமில வாயு கழிவுகள் வெளியேற்றப்படும் என்றும் ஐ.நா. காலநிலை அமைப்பு கூறியுள்ளது.
சீனாவில் உள்ள சென்சென் நகர நிர்வாகம், மே 1 முதல் காட்டு விலங்குகளை உணவாக கொள்வதை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலில் காட்டு விலங்குகள் வணிகத்தை ரத்து செய்துள்ளது.
மிகப் பெரும் மரண துயரம் மற்றும் நிதி துயரத்தில் ஐரோப்பிய நாடுகளை கொரோனா வைரஸ் தள்ளியுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய யூனியன், உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதாக கூறியுள்ளது. அதை கடனாக தராதீர்கள், எங்களுக்கு பரிசாக தந்துவிடுங்கள் என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.