வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். ஆனால் புல்லைக் கொண்டு ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டிருப்பது தெரியுமா? அந்த இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும். சாதாரண மலை புற்களை கைகளால் கயிறாகத் திரித்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இந்த பாலம் அமைந்துள்ளது. இன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோ அமைப்பால் 2013ஆம் ஆண்டு இந்தப் பாலம் உலக புராதானச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மலைப் பகுதியில் வளரும் சாதாரண புற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் கட்டுவார்கள்.பல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது. இந்த பகுதியில் வாழும் மக்கள் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி, சிதிலமடைந்த கயிற்றை அப்புறப்படுத்தி புது கயிற்றை கட்டி, இந்த பாலத்திற்கு உயிர் தருவார்கள். பாலம் கட்டுகிற வேலையில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். ஆனால் பெண்கள்தான் இந்த பாலத்திற்கான கயிற்றை புற்கள் கொண்டு திரித்து தருவார்கள்.இந்த பாலம் கட்டும் வேலை மூன்றே நாட்களில் முடிந்துவிடும்.
முதல் நாள் ஆண்கள் எல்லாம் கூடி, புற்களால் திரிக்கப்பட்ட சிறு-சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுவார்கள். இதற்கான கயிற்றை ஒவ்வொரு குடும்பமும் வழங்க வேண்டும். கயிறு உறுதியாக இருக்க அதற்காக பயன்படுத்தப்படும் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பிறகே திரிப்பார்கள். இந்த பாலம் கட்டும் பணி நடைபெறும் மூன்று தினங்களும் உணவுப் பொருட்களை கொண்டு சென்று அங்கேயே சமையல் செய்வார்கள். பழைய கயிறு பாலத்தை ஆற்றில் தள்ளிவிடுவார்கள். மட்கும் பொருள் என்பதால் அது ஆற்றில் கிடந்து மட்கிப் போய்விடும்.இந்த பாலம் கட்டும் பணியில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. முழுக்க முழுக்க புற்கள் மட்டும் மனித ஆற்றலை கொண்டு மட்டுமே இந்தப் பாலம் கட்டப்படுகிறது.