எழுத்தாளர் கு. அழகிரிசாமி செப்டம்பர் 23, 1923ல் பிறந்தார். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த கு.அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.
அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில்எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர்உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட “ஆனந்த போதினி” பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.“ஆனந்த போதினி”, பிரசண்ட விகடன்” ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்டு, அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார்.பிரசண்ட விகடனில் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும் புதுமைப்பித்தனும் தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு “தமிழ்மணி” என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.
அங்கு அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட “சக்தி” மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ. ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும் இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.அழகிரிசாமியின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின. “ராஜா வந்திருக்கிறார்” என்ற அவரது கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர். தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை. 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.எழுத்தாளர் கு.அழகிரிசாமி 1970ஆம் ஆண்டு ஜூலை 5ல் காலமானார்.
===பெரணமல்லூர் சேகரன்===