மதுரை
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேலு 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த வடிவேலு 1988-இல் "என் தங்கை கல்யாணி" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானாலும் அந்த படத்தில் முழுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. மீண்டும் 1991-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ்கிரணின் நடிப்பில், கஸ்தூரிராஜா இயக்கிய "என் ராசாவின் மனசிலே" திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. 1996-ஆம் ஆண்டு "காலம் மாறிப்போச்சு" திரைப்படத்திற்காக மாநில அரசு விருதை வென்றார். அதன்பின் வடிவேலுவுக்கு ஏறுமுகம் தான். 2017-ஆம் ஆண்டு வரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 24-ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் உள்ளிட்ட படங்களில் கதாநாயனாகவும் நடித்துள்ளார். வடிவேலு சிறந்த பாடகரும் கூட.தனது சொந்த குரலில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட பாடல்களில் பாடியுள்ளார்.
2016-17-ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக 2017-ஆம் ஆண்டிலிருந்து நடிப்பிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார். நடிப்பிலிருந்து வடிவேலு ஒதுங்கினாலும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாக வடிவேலு தொடந்து டிரெண்ட் ஆகி வருகிறார். சொல்லப்போனால் வடிவேலு என்றால், மீம்ஸ் என்றால் வடிவேலு என்ற நிலையில் சமூக வலைத்தளம் அவரது ஆதிக்கத்தில் உள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது, கலாய்ப்பது, கருத்து கூறுவது என எந்த விஷயம் ஆனாலும் அதில் வடிவேலு படம் கண்டிப்பாக இருக்கும். பிரெண்ட்ஸ் பட கதாபாத்திரமான நேசமணி மீம்ஸ் உலகளவில் டிரெண்டிங் ஆனது. தமிழகத்தில் வெளியாகும் மீம்ஸ்களில் 90% வடிவேலு உடையது என்பதால் அவரை தற்போதைய இளசுகள் தலைவர் என்று தான் அழைக்கிறார்கள்.
இன்றைய தினம் அவருக்கு 60-வது பிறந்த தினம் ஆகும். இன்றைய நாளில் அவருடைய பிறந்தநாள் வாழ்த்து மற்றும் வாழ்த்து மீம்ஸ்களால் சமூக வலைத்தளங்கள் திணறி வருகின்றன.