புதுதில்லி:
பொருளாதார மந்தநிலை காரணமாக, 2020-21 நிதியாண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவிகிதத்திலேயே நீடிக்கும்; மற்றொரு புறத்தில்,15 லட்சத்து 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும் என்று ‘ஸ்டேட் பாங்க் ஆப்இந்தியா’ அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும் என்று அது கூறியுள்ளது.
ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரின் வேலைவாய்ப்பு குறித்து, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’வின் (SBI) பொருளாதார ஆராய்ச்சித் துறை, ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.2019-20 நிதியாண்டைப் பொறுத்தவரை, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு இந்தியாவில் வேலையின்மை, மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று அரசுத் தரப்புதனது அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கேற்பவே, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவிகிதமாகவும், ஜூலை -செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவிகிதமாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிகுறைந்தது. இந்நிலையில்தான், 2019 ஏப்ரல் முதல்2020 மார்ச் வரையிலான முழு நிதியாண்டில் 4.6 சதவிகித வளர்ச்சி மட்டுமேஇருக்கும் என்றும், 2020-21 நிதியாண்டில், சுமார் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் குறையும் என்றும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ மதிப் பிட்டுள்ளது.
தொழிலாளர் சேமநல நிதிய கணக்கின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 89 லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை 2020இல் 73 லட்சத்து 90 ஆயிரமாகும்; அதாவது 15 லட்சத்து 80 ஆயிரம் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறையும் என்று கூறியுள்ளது.வேலையின்மை காரணமாக, இந்தியாவில் தற்கொலை செய்துகொள் வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதை ஸ்டேட் பாங்க்இந்தியா ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2018-ஆம் ஆண்டில் மட்டும் வேலையின்மையால் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டனர். அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் என்ற அளவில் வேலையின்மை பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனர். 2017-ஆம் ஆண்டில் வேலையின்மையால் நடந்த தற் கொலைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்துள்ளது. அந்த ஆண்டின் மொத்த தற்கொலைகளில் வேலையின்மையால் நடந்த தற்கொலைகள் 10 சதவிகிதம் என்று எஸ்பிஐ சுட்டிக் காட்டியுள்ளது.
2019-20 நிதியாண்டிற்கான தற் கொலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் வேலையின்மை ஒரு முக்கியப்பிரச்சனை என்பதால், தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. 2020-21 நிதியாண்டிலும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிப்பதற்கு மாறாக, 16 லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கம் குறையும் என்று கூறப்படுவதால், நாட்டில் வேலையற்ற இளைஞர்களின் தற்கொலைகள் தொடர்கதையாகப் போகிறது என்பதையும் ஸ்டேட் பாங்க் இந்தியாவின் ஆய்வறிக்கை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.