tamilnadu

img

நீதிபதி முரளிதரைக் கண்டு மோடி அரசு அஞ்சுவது ஏன்? தேதியே இல்லாமல் அவசர அவசரமாக வந்த பணியிட மாற்ற உத்தரவு

புதுதில்லி:
தில்லி வன்முறைச் சம்பவத்தில், பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா, அபே வர்மாஉள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவுசெய்ய உத்தரவிட்டவர், தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர். 

அதுமட்டுமல்ல, “தில்லி வன்முறையில் 35 உயிர்கள் போயிருக்கும் நிலையில், எப்ஐஆர் பதிவு செய்வதற்கு, நேரம் காலம் பார்க்க வேண்டுமா? இன்னும் எத்தனை உயிர்களை இழந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்வீர்கள்? நகரமேபற்றி எரிந்த பிறகுதான் எப்ஐஆர் பதிவுசெய்யப்படுமா?” என்று வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசைகேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவர் நீதிபதி முரளிதர் ஆவார்.ஆனால், அன்று நள்ளிரவே, நீதிபதிமுரளிதரை, பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தில்லி வன்முறைச் சம்பவத்தில், நீதிபதி முரளிதரின் விசாரணை, மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய பின்னணியிலேயே, இந்த இடமாறுதல் நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மத்திய அரசோ, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான், நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று சமாளித்துள்ளது.முரளிதர் இடமாற்றத்திற்கான பரிந்துரையை, பிப்ரவரி 12-ஆம் தேதியே கொலீஜியம் அளித்து விட்டது உண்மைதான். ஆனால் அப்போதே கொலிஜியத்தில் இருந்த 5 நீதிபதிகள் இடமாற்ற முடிவைஎதிர்த்தனர். உயர் நீதிமன்ற பார் அசோசியேஷனும் பணியிட மாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய் தது. மத்திய அரசும் பணியிட மாற்ற அறிவிப்பை ஒத்திவைத்தது.

ஆனால், தில்லி வன்முறை வழக்கில் நீதிபதி முரளிதர் மேற்கொண்ட விசாரணை நெருக்கடியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரைப் பழிவாங்குவதற்கு கொலீஜியம் பரிந்துரையை நேரம் பார்த்து மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.தில்லி வன்முறை வழக்கு நீதிபதி முரளிதர் அமர்விடம் சென்றுவிடக் கூடாது என்று ஆரம்பம் முதலே மத்தியஅரசு பதறியது. அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.நீதிபதி முரளிதர், வழக்கறிஞராக பணியாற்றிய காலம்தொட்டு, பெரும்பாலும், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றவர். 1984-ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி பெற்றமுரளிதர், போபால் எரிவாயுக் கசிவில்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், நர்மதா ஆற்றில் அணைகள் கட்டும்போது வெளியேற்றப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் தில்லி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வாதாடியவர். ஏழை மக்களுக்கு பல்வேறு வழக்குகளில்நீதி பெற்றுத் தந்தவர்.

16 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய முரளிதர், 2006-ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகும் உரிமைமறுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் அவர் உறுதியாக இருந்தார். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், விசாரணைசிறைவாசிகள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் மற்றும் குடிசைவாசிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தீர்ப்புகளை வழங்கினார்.1984 சீக்கியர்க்கு எதிரான வன்முறை, உத்தரப்பிரதேச ஆயுத சட்ட வழக்கு, எல்ஜிபிடி உடல் உறவு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்துகளைத்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிந்துகொள்வதற்கான வழக்குஎன பலவற்றில் நீதிபதி முரளிதர் அதிரடியான தீர்ப்புகளை அளித்துள்ளார். “2002-இல் குஜராத்தில் நடந்த வன் முறை, 1993-இல் மும்பையில் நடந்த வன்முறை, 2008-இல் ஒடிசாவில் நடந்த வன்முறை, 2013-இல் முசாபர் நகரில் நடந்தவன்முறை போன்றவற்றில் எல்லாம், சிலஅரசியல்வாதிகள், பிரபலங்கள் குளிர் காய்கிறார்கள்” என்று சஜ்ஜன் குமார் வழக்கில் துணிச்சலுடன் குறிப்பிட்டார்.“இந்தியாவில் நடக்கும் பல வன் முறைகள் தூண்டிவிடப்பட்டவைதான். ஆனால் இதைத் தூண்டிவிட்டவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அரசியல் லாபங்களைப் பெறுகிறார்கள். அவர் களுக்கு எந்த சிக்கலும் இல்லை. இவர்கள்தான் இந்தியாவின் சட்டத்திற்கு எதிரானவர்கள். இதுபோன்ற கிரிமினல்கள் இந்திய இறையாண்மையை கெடுக்கிறார்கள்” என்று மற்றொரு தீர்ப்பில் குறிப்பிட்டார். சிறுபான்மையினருக்கு எதிரானவன்முறைகளை பலமுறை கண்டித்திருக்கிறார்.அடிப்படையில், இவை அனைத் துமே ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தத் திற்கு எதிரானவை. \

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டம் நீதிபதி முரளிதரோடு நேரடியாக மோதியது எப்போதுஎனில், ‘பீமா கோரேகான்’ வழக்கில் சிலர்தவறாக கைது செய்யப்பட்டதை நீதிபதிமுரளிதர் கண்டித்து உத்தரவிட்டு இருந் தார். இந்த வழக்கில் கைதான கவுதம் நவ்லவ்காவை உடனே விடுதலை செய்ய உத்தரவிட்டார். மும்பை காவல்துறைக்கு கண்டனத்தையும் தீர்ப்பில் பதிவு செய்திருந்தார். நீதிபதி முரளிதரின் இந்த தீர்ப்பைக்கொச்சைப்படுத்தி, ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ்-காரர்கள்மோசமான கட்டுரைகளை எழுதினர். அப்போது குருமூர்த்திக்கு எதிராக, நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி முரளிதர் உத்தரவிட்டார். இது ஆர்எஸ்எஸ் தலைவர்களை ஆத்திரமடையச் செய்துவிட்டது. முரளிதரை அவர்கள் மேலும்கடுமையாக விமர்சனம் செய்தனர். முரளிதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். மோடி அரசும், நீதிபதி முரளிதரை தில்லி உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்ற தொடர்ந்து முயற்சித்து வந்தது. கொலீஜியம் பரிந்துரையையும் பெற்றது. 

ஆனால், அதற்கு உள்ளாகவே தில்லிவன்முறை வழக்கில், மீண்டும் நீதிபதி முரளிதரிடம் வசமாகச் சிக்கியது. தில்லிவன்முறை குறித்து ஹர்ஷ் மந்தர் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை நீதிபதி முரளிதர் - தல்வாண்ட் சிங் அமர்வு அவசர வழக்காக செவ்வாயன்று நள்ளிரவு 12.40 மணிக்கு விசாரித்தது. அப்போதே அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, வழக்கை தள்ளிப்போட எவ்வளவு முயன்றும் நீதிபதி முரளிதர் அதற்கு அனுமதிக்கவில்லை.இந்நிலையில்தான், இனியும் முரளிதர் இந்த வழக்கை விசாரணை செய்வது தங்களுக்கு சரியாக இருக்காது என்று, பயந்துபோன மோடி அரசு, பிப்ரவரி 12-இல் அளிக்கப்பட்ட கொலீஜியம் பரிந்துரையை பயன்படுத்தி தந்திரமாக இடமாற்றம் செய்துள்ளது. அந்த உத்தரவில் தேதி கூட குறிப்பிடாமல் அவசரம் காட்டியுள்ளது.