tamilnadu

மேற்கு வங்க இடதுசாரி வேட்பாளர்கள் மீது தாக்குதல்: சிபிஎம் கண்டனம்

புதுதில்லி, ஏப்.11-மேற்கு வங்கத்தில் இடது முன்னணிவேட்பாளர்கள் மூவர் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அது கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:செவ்வாய்க்கிழமையன்று மேற்கு வங்கத்தில் அசன்சால் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் கௌரங்கா சட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.அதேபோன்று டைமண்ட் ஹார்பர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் டாக்டர்ஃபாட் ஹாலிம் கடுமையான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.திங்கள் கிழமையன்று, பசீரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பல்லவ் குப்தா, திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.கார்ப்பரேட் ஊடகங்கள் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்று திரும்பத்திரும்ப பிரச்சாரம் செய்துவரும் அதே சமயத்தில், இவ்வாறு வேட்பாளர்கள் மீது கொலைபாதகத் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்திடும் அதேசமயத்தில், இத்தகைய ரவுடித்தனங்களால் செங்கொடியின் கீழ் மக்கள் அணிதிரள்வதை நசுக்கிட முடியாது என்றும் எச்சரிக்கிறது. மேற்கு வங்கத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாகச் செயல்படும் இத்தகைய குண்டர்களைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்று மேற்கு வங்கத்திலும், நாட்டிலும் வாழும் ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)