tamilnadu

img

கோயம்பேடு சந்தைக்கு சென்ற 110 பேருக்கு புதுச்சேரியில் சோதனை

புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் சென்ற 110 பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வு வந்த பின் அனைவரும் பணியில் தளர்வு ஆனது போல உள்ளனர். இதனால் சுகாதாரத்துறைக்கு பல பிரச்சனைகள் வரும். புதுவை பெரிய மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை ஒட்டியுள்ளது. கடலூர், விழுப்புரம் அபாயகட்டத்தில் உள்ளன.

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அவர்களும் புதுவைக்கு வருகின்றனர். மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் கொரோனா பரவலை தடுக்க முடியாது.
புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்கள், அந்த வியாபாரிகளுடன் தொடர்புடையவர்கள், அந்த வாகனங்களில் சென்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 110 பேருக்கு உமிழ்நீர் எடுத்து கொரோனா உள்ளதா? என கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று இருந்தால் புதுவையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதால் ஆரஞ்சு மண்டலமாக உள்ள புதுவை சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.