புதுச்சேரி, ஏப். 16- முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வைத்தியலிங்கத்திற்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி மக்களவை தொகுதியின் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கேட்டு முதல்வர் நாராயணசாமி இரு சக்கர வாகனத்தில் உப்பளம் முதலியார்பேட் பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,“ மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கோப்பிற்கு துணை நிலை ஆளுநர் அனுமதி தரவேண்டும். ஆனால் இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை, சென்டாக் பணம், அரசு வேலை வாய்ப்புகளை நிரப்புவது உள்ளிட்ட அனைத்தையும் தடுத்து வருகிறார். அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் தினமும் முடக்கி வருகிறார்” என்றார்.ஆளுநர் கிரண்பேடியின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் நாராயணசாமி வேண்டு கோள்விடுத்தார்.