பத்தனம்திட்டா:
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் புனித பயணம் மேற்கொள்வோருக்கு வசதியாக நிலைவக்கல்லில் கூடுதல் வாகன நிறுத்துமிட வசதி செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.பி.நூக் தெரிவித்தார்.நிலைக்கல் பேஸ் கேம்ப் திட்ட பகுதிகளும், ஹெலிப்பேடும் பார்வையிட்டபின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நிலைக்கல் கோசாலைக்கு அருகில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் சதர மீட்டர் பரப்பளவில் கூடுதல் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி செய்ப்பட்டு வருகிறது. தற்போது 17 நிறுத்தமிடங்களில் ஒரே நேரத்தில் 9 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. இவை அல்லாமல் கோசாலை அருகில் பரந்து விரிந்த அளவிலான இடம் தயாராகி வருகிறது. இந்த பகுதிக்கு வந்து செல்ல தனியாக சாலையும் அமைக்கப்படும்.
மண்டல பூஜை காலத்தில் சபரிலை பணிக்காக வரும் காவல்துறையினர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஹெலிப்பேடு அருகில் ஒரே நேரத்தில் சுமார் 500பேர் வரை தங்குவதற்கான தற்காலிக வசதி கூடுதலாக செய்யப்படும். புனித பயணம் துவங்குவதற்கு முன்பு நவம்பர் 15க்குள் தங்குமிடமும், கழிப்பிட வசதியும் இங்கு செய்யப்படும். அண்மையில் தேவசம் முதன்மை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குறைந்தது 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உடனடியாக வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.