தார்வாட்:
மத்திய பாஜக அமைச்சரான பிரகலாத் ஜோஷி, பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவரை, பொதுமக்கள் மத்தியிலேயே திட்டி அவமானப்படுத்தியதும், அதனை தாங்கிக்கொள்ள முடியாத ஆட்சியர் மேடையிலேயே கண்கலங்கிஅழுத சம்பவமும் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம் ஹுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில், காந்தி ஜெயந்தி - லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போதுதான், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தர்வாட் மாவட்ட ஆட்சியரான தீபா சோழனை கடுமையாக திட்டியுள்ளார்.
“இவ்வளவு பெரிய அளவில் விழா நடத்துகிறீர்கள். ஆனால் ஏன் எனக்குமுறையாக தகவல் தெரிவிக்க வில்லை. விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏன் செய்யவில்லை. குறிப்பாக ஏன் பத்திரிகையாளர்களை அழைக்க வில்லை. நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லையா?” என்று கோபமாகவும், சப்தமாகவும் கேட்டுள்ளார். தீபா சோழன் அதற்குப் பதிலளிக்க முயன்றபோது, அவை எதையும் கேட்கமுன்வராத மத்திய அமைச்சர் தொடர்ந்து கோபத்துடன் ஆட்சியரை திட்டியுள்ளார்.
அனைவர் முன்பாகவும் நடந்த இந்த சம்பவத்தால், அவமான மடைந்த ஆட்சியர் தீபா சோழன்,மேடையிலேயே கண்கலங்கியுள்ளார். மேலும், கண்கலங்கிய நிலையிலேயே அமைச்சரிடம் மீண்டும் மீண்டும் பேசி விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். ஆனாலும் அமைச்சர் கேட்கவில்லை. ஆட்சியர் தீபா சோழனின் நிலையை புரிந்து, அவருக்கு உதவுவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரி சுரேஷ் இத்னாலையும் பிரகலாத் ஜோஷி கண்டித்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் இந்த செயல் நாகரிகமற்றது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.