புதுதில்லி:
‘காந்தியின் இந்துத்துவம்: ஜின்னாவின் இஸ்லாமுக்கு எதிரான போராட்டம்’ என்ற தலைப்பில், மத்திய முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர்,நூல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 1940-ஆம் ஆண்டில் இருந்து 1947-ஆம் ஆண்டு வரையிலான நாட்டுப்பிரிவினை தொடர்பான குளறுபடிகளையும், அன்றைய தலைவர்களின் நிலைப்பாடுகளையும் விவரித்துள்ள எம்.ஜே. அக்பர், நாட்டுப் பிரிவினைக்குப் பின், காந்தி பாகிஸ்தானில் வசிக்க விரும்பியதாகவும் ஓரிடத் தில் பதிவு செய்துள்ளார்.“இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைக் காந்தி விரும்பவில்லை. இரு நாடுகளிலும் சிறுபான்மையினராக இருப்பவர்களின் நிலைமை பற்றித்தான் அவர் உடனடியாக கவலைப்பட்டார். பிரிவினை நடப்பது உறுதியாக தெரிந்தவுடன், கிழக்கு வங்காளத்தில் உள்ள நவகாளிக்கு சென்று, மீண்டும் கலவரம் நடப்பதை தடுக்க விரும்பினார்.
1947-ஆம் ஆண்டு மே 31-ந் தேதி, ‘எல்லைக் காந்தி’ என்று அழைக்கப்பட்ட பதான் தலைவர் கான் அப்துல் கபார் கானைகாந்தி அழைத்தார். அவரிடம், “நான் பிரிவினையை விரும்பவில்லை. பிரிவினைக்குப் பிறகு, வடமேற்கு எல்லைப் புறத்துக்கு சென்று பாகிஸ்தானில் வசிக்கப்போகிறேன். இதற்காக யாரிடமும் அனுமதி கேட்கப்போவதில்லை. அவர்களை மீறியதற்காக என்னை கொலை செய்தாலும், சிரித்த முகத்துடன் மரணத்தை தழுவுவேன் என காந்தி கூறினார்” என்று அக்பர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.