tamilnadu

img

ரூ.1,000 கோடி மதிப்புள்ள 188 ஏக்கர் நிலத்தை மீட்டது திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி, செப். 9 -  80 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 188 ஏக்கர் நிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மீண்டும் கிடைத்துள்ளது. ஏழுமலையான் வைபவம் பற்றி 32,000 சங்கீர்த்தனைகளை இயற்றிப் பாடியவர் தாளப்பாக்கம் அன்னமய்யா. அவருக்கு 1865ஆம் ஆண்டில் அப்போதைய தேவஸ்தான நிர்வாகம், திருப்பதி மத்திய பேருந்து நிலையத்தின் வடகிழக்கே உள்ள 188 ஏக்கர் நிலத்தை இனாம் அடிப்படையில் வழங்கியது. தாளப்பாக்கம் அன்னம்மய்யாவின் வாரிசுகள் தொடர்ந்து கோவிலுக்கு சேவை செய்யும் வரை, நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். ஆனால் 1925ஆம் ஆண்டுடன், கோவிலுக்கு சேவை செய்வதை நிறுத்திய அன்னம்மய்யாவின் வாரிசுகள், 188 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க மறுத்ததுடன், சுப்பா ரெட்டி மற்றும் குருவா ரெட்டி ஆகியோரது குடும்பத்திற்கு குத்தகை அடிப்படையில் கொடுத்தனர்.

திருப்பதி எம்.எல்.ஏ.வாக இருந்த குருவா ரெட்டி, தனது குடும்பத்தினர் பெயரில், நிலத்தை பட்டா போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து சித்தூர் இனாம் தாசில்தாரை, தேவஸ்தானம் அணுகியது. 80 ஆண்டு களாக நடந்து வந்த சட்டப்போராட்டத்தின் முடிவில், 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 188 ஏக்கர் நிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வந்துள்ளது. 188 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம், வீடுகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ள  நிலையில், அவற்றை காலி செய்து நிலத்தை கையகப்படு த்தும் நடவடிக்கையை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.