புதுதில்லி:
தில்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், திடீரென இடமாற்றம் செய்யப் பட்டிருப்பது, நீதித்துறையில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் கூறியுள்ளார்.
ஆங்கில இணையதளம் ஒன்றுக்குஅளித்துள்ள பேட்டியில், இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:தில்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை நீதிபதி முரளிதர் விசாரிக்காமல் இருந்தால், அவரை இடமாற்றம்செய்தது, நீதித்துறை சார்ந்த ஒரு நடவடிக்கையாக பார்க்கப் பட்டிருக்கும். நீதிபதி முரளிதரின் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரம்தான் இப்போது முக்கியமானது. அதுமட்டுமல்ல, வழக்கமான அலுவலக நேரங்களில் பணியிடமாற்ற அறிவிப்பை வெளியிடாமல் இரவு 11 மணிக்கு இதை வெளியிட்டுள்ளனர். இது சரியானது அல்ல. இது சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்தேக ங்கள் களையப்பட வேண்டும்.
நீதிபதிகளை இரவில் இடமாற்றம் செய்தால் அவர் களுக்கு ஆளுநரோ அல்லது தலைமை நீதிபதியோ உடனே பதவி பிரமாணம் செய்து வைப்பார்களா? என நிறைய கேள்விகள் எழு கின்றன.பணியிட மாற்றங்களில் நீதிபதிகளை இப்படி பந்தாடக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் அரசுக்கு கண்டிப்பாக எடுத்துக் கூற வேண்டும். இத்தகைய திடீர் இடமாற்றங்கள் நிச்சயம் ஒருவித அச்ச உணர்வையே உருவாக்கும்.எனவே, முரளிதர் இடமாற்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். நீதித்துறை என்பது சுதந்திரமாக இயங்க வேண்டும். இத்தகைய திடீர் இடமாற்றங்கள் நீதித்துறையின் மாண்பை சீர்குலைக்கின்றன.இவ்வாறு மதன் பி லோகுர் குறிப்பிட்டுள்ளார்.