புதுதில்லி:
வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்கவில்லை என்று கூறி, 2018-19ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 3 ஆயிரத்து 309 கோடியே 44 லட்சத்தை அபராதமாகவங்கிகள் வசூல் செய்துள்ளன.இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி,அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேபோல, பிரதமரின் ஜன் தன்யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லை.
ஆனால் மற்ற சேமிப்புக் கணக்குகளில் ஒவ்வொரு வங்கிக்கும் குறிப்பிட்ட இருப்புத் தொகை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன.இவ்வாறாக 2016-17 முதல் 2018-19 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவின் 18 பொதுத்துறை வங்கிகளும் நான்கு முன்னணி தனியார்துறை வங்கிகளும் வசூலித்த அபராதத் தொகை குறித்த விவரங்களை ஜூலை 23ஆம்தேதி மக்களவையில் நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாக்குர் வெளியிட்டுள்ளார்.
“2016-17ஆம் ஆண்டில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம் பொதுத் துறை வங்கிகள் ரூ. ஆயிரத்து 115 கோடியே 44 லட்சம் அபராதம் வசூலித்தன. தனியார் வங்கிகள் ரூ. 790 கோடியே22 லட்சம் அபராதம் வசூலித்தன. 2017-18ஆம்ஆண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ. ஆயிரத்து 138 கோடியே 42 லட்சமும், தனியார் வங்கிகள் ரூ. 3 ஆயிரத்து 368 கோடியே 42 லட்சமும் அபராதம் வசூலித்தன. தற்போது, 2018-19ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ. ஆயிரத்து 312 கோடியே 98 லட்சமும், தனியார் வங்கிகள் ரூ. ஆயிரத்து 996 கோடியே 46 லட்சமுமாகமொத்தம் ரூ. 3 ஆயிரத்து 309 கோடியே 44 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளன.அதாவது, குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் கூட பராமரிக்க முடியாத ஏழைகளிடமிருந்து, ரூ. 3 ஆயிரத்து 300 கோடியை அபராதம்என்ற பெயரில் வங்கிகள் சூறையாடியுள்ளன.