கோட்டயம்:
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தசைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காண கேரளாவைச் சேர்ந்த அவரது தாயார் காரில் 2,700 கி.மீ பயணம் செய்துள்ளார். இவருக்கு தேவையான உதவிகளை கேரள அரசு செய்து கொடுத்துள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார்(29). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வருகிறார். தசைவீக்கம் நோயால் அவர் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது, கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மகனை காண செல்ல அவரது தாய் ஷீலாம்மா வாசன் முடிவு செய்து கோட்டயம் ஆட்சியரை நாடியுள்ளார்.
சம்பவத்தை கேட்டறிந்த ஆட்சியர் பி.கே.சுதீர் பாபு தேவையான அனுமதி கடிதங்களை அளித்துள்ளார். தொடர்ந்து ஷீலாம்மா, அவரது மருமகள் பார்வதியந்த் மற்றும் உறவினர் ஒருவருடன் காரில் ஏப்ரல் 11-ஆம் தேதி கோட்டயம் மாநிலம் கோருடோடு ஊராட்சியில் உள்ள பனக்கச்சிரா கிராமத்திலிருந்து புறப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானை மலையாள புத்தாண்டான (விசு) ஏப்ரல் 14- ஆம் தேதி சென்றடைந்தார். ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை ஷீலாம்மா பார்த்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஷீலாம்மா, தற்போது தன் மகனின் உடல்நிலை தேறி வருவதாக வும், பயணத்திற்கு உதவி செய்ததற்கும் எனது கோரிக்கையில் உரிய தலையீடு செய்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன், முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி ஆகியோருக்கும் கோட்டயம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கி தவித்து வந்த தன் மகனை அழைத்து வந்தார். சுமார் 1,400 கி.மீ.,தூரத்தை தன் இருசக்கர வாகனத்தில் அவர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.