tamilnadu

img

கான்பூர் சதி வழக்கு - என்.ராமகிருஷ்ணன்

1921 - 24ஆம் ஆண்டுகளில் பெஷாவரில் கம்யூனிஸ்ட் சதி வழக்குகள் நடைபெற்று வந்தபோது, சென்னையிலும், பம்பாயிலும் மற்றும் கல்கத்தாவிலும் கம்யூனிஸ்ட் கருத்துப் பிரச்சாரம் பிரபலமாகி வந்தது. ஏற்கெனவே சொன்னதுபோல் சென்னையில் சிங்காரவேலர் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளையும் பம்பாயில் டாங்கே ‘சோசலிஸ்ட்’ என்ற பத்திரிகையையும் கல்கத்தாவில் முசாபர் அகமது ஒரு பத்திரிகையையும் நடத்தி ஆங்கிலேய - எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் மார்க்சிய பிரச்சாரத்தையும் நடத்தி வருவதையும் இந்த இடங்களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி வருவதையும் கண்டு ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய அரசாங்கம் சிங்காரவேலர், டாங்கே மற்றும் முசாபர் அகமது ஆகிய மூவரையும் மையமாக வைத்து தொடுத்த வழக்குதான் கான்பூர் சதி வழக்கு. 

1923ஆம் ஆண்டு மே மாதத்தில் முசாபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் உசேன் ஆகிய மூவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் காவல்துறையினர் சிங்கார வேலரைக் கைது செய்ய வந்தபோது, அவர் டைபாய்டு காய்ச்சலில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பரிசோதித்த ஆங்கிலேய அரசாங்க பெரிய மருத்துவர் சிங்காரவேலரை கான்பூர் கொண்டு செல்ல அனுமதி தரவில்லை.  ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கெனவே ஒரு திட்டம் வைத்திருந்தது. பெஷாவர் நகரில் ‘மாஸ்கோ வழக்கு’ என்ற கம்யூனிஸ்ட் சதி வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அந்த வழக்கில் சௌகத் உஸ்மானியையும், முசாபர் அகமதுவையும் சேர்க்க அது திட்டமிட்டிருந்தது. ஆனால் வடமேற்கு எல்லை மாகாணத்தில் பிரதம கமிஷனராக இருந்த சர் ஜான் மாபே என்பவர் இதற்குச் சம்மதிக்க மறுத்தார். இந்த இரண்டு பேரையும் வழக்கில் சேர்த்தால் மீண்டும் துவக்கத்திலிருந்து விசாரணை நடைபெற வேண்டும், எனவே அதைச் செய்ய முடியாது என மறுத்துவிட்டார். 

இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவது தனது ஆதிக்கத்திற்கு ஆபத்தானது என்று ஆங்கிலேய அரசாங்கம் கருதியதால் அது அந்த இயக்கத்தை அழிப்பதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தோடு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியர்கள் அனைவரையும், சிறையிலடைக்க ஒரு குற்றப் பத்திரிகையைத் தயாரித்தது. அந்த சதிவழக்குதான் கான்பூர் சதி வழக்கு.  முதலில் 105 பேரை கைது செய்ய வேண்டுமென்று அது திட்டமிட்டது. பின்னர் அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் பின்வரும் எட்டு பேர் மீது வழக்கு தொடர முடிவு செய்தது.

1. எம்.என்.ராய்
2. மௌலாபக் ஷ் என்ற சௌகத் உஸ்மானி
3. முசாபர் அகமது
4. குலாம் ஹூசேன்
5. நளினி குப்தா
6. ராம் சரண்லால் சர்மா
7. எஸ்.ஏ.டாங்கே
8. சிங்காரவேலர்
 

இந்த எட்டுப் பேர் மீதும் 1898ஆம் வருடத்திய குற்றப் பிரிவு சட்டத்தின் 196 பிரிவின்கீழ் கீழ்க்காண்போர் மீது மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கைத் தொடரும் படி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த எட்டுப் பேரில் என்.என்.ராய் ஜெர்மனியில் இருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அதேபோல் ராம் சரண்லால் சர்மா பிரெஞ்சுப் பிரதேசமான பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல் சிங்காரவேலரை மருத்துவ காரணத்தால் கைது செய்ய முடியவில்லை. குலாம் உசேன் என்பவர் பெஷாவர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது ஷாபி என்பவருக்கு எதிராக சாட்சியம் தருவதாக வாக்களித்து அப்ரூவராக மாறினார். எனவே அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இறுதியாக சௌகத் உஸ்மானி, முசாபர் அகமது, நளினி குப்தா, எஸ்.ஏ.டாங்கே ஆகிய நால்வர் மீது மட்டும் குற்றப் பத்திரிகை சாட்டப்பட்டது. மணிலால் டாக்டர் என்ற வழக்கறிஞர் முசாபர் அகமதுவுக்காகவும், சௌகத் உஸ்மானிக்காகவும் வாதாடினார். கபில்தேவ் மாளவியா என்ற வழக்கறிஞர் டாங்கேவிற்காகவும், நளினி குப்தாவுக்காகவும் வாதாடினார். முதலில் லண்டனில் இருந்த கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக பிரபல வழக்கறிஞர் முகமது அலி ஜின்னாவைத்தான் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் 30 ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று கேட்டார். ஏனென்றால் அரசாங்க வழக்கறிஞருக்கு அரசாங்கம் தினமும் 1000 ரூபாய் கொடுத்தது. ஜின்னாவுக்கு கம்யூனிஸ்ட் பாதுகாப்புக்குழு அவ்வளவு பணம் தர இயலாத நிலையில் அவர் ஆஜராகவில்லை. 

பெஷாவர் சதிவழக்கில் அந்த வழக்கு விபரம் வெளியே தெரியக்கூடாது என்று மூடி மறைத்த அரசாங்கம் இப்பொழுது இந்த வழக்கை பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் பயத்தை உண்டுபண்ணுவதற்காக பத்திரிகையாளர்களை நீதிமன்றத்திற்குள் நுழையவும், செய்தி சேகரிக்கவும் அனுமதித்தது. இந்தச் சதிவழக்கின் ஆரம்ப விசாரணை நாளன்று உளவுத்துறை இயக்குநர் கர்னல் சிசில்கேயி என்பவர் செய்தியாளர்களை அழைத்து இந்த வழக்கு முழுவதையும் ‘கான்பூர் போல்ஷ்விக் சதிவழக்கு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடும் படி கூறினார். இதனால் இமயம் முதல் குமரி வரை போல்ஷ்விக் என்ற வார்த்தை பிரபலமாயிற்று. இந்த வழக்கில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களின் சுருக்கம் பத்திரிகையில் வெளியானது. ஏராளமானோர் இவற்றைத் தொடர்ந்து படிக்கலாயினர். 

கான்பூரில் இருந்த மாணவர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. போல்ஷ்விக் என்றால் கொடூரமான தோற்றம் கொண்டவர்களா? எப்படிபட்டவர்கள் என்ற ஐயம் ஏற்பட்டது. இதேபோன்றே கான்பூர் நகரில் பெரியவர்களுக்கும் ஏற்பட்டது. எனவே அந்நகரின் இளைஞர்களும், பெரியவர்களும் தினமும் நீதிமன்றத்திற்கு வந்து முசாபரையும், மற்ற மூவரையும் பார்த்து ‘அடடே எல்லோரும் இந்தியர்கள்தான்’ என்று கூறிக்கொண்டே திரும்பினர்.     

கீழமை  நீதிமன்றத்தில் இந்த வழக்கு 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி துவங்கியது. பின்னர் அது செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு நடைபெற்று வரும் போது  பார்வையாளர் இருப்பிடத்தில் எஸ்.வி.காட்டே மற்றும் அப்துல் ஹலீம் என்ற பெயரிலான இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் சத்ய பக்தா என்ற ஒருவரும் அமர்ந்திருந்தனர். காட்டேயும் ஹலீமும் முசாபர் அகமது மற்றும் டாங்கேவுக்காக உதவிசெய்ய வந்திருந்தனர். அவர்களை விசாரித்த சத்ய பக்தா அவர்கள் இருவருக்கும் கான்பூரில் தங்க இடமில்லை என்று புரிந்து அவர்களை தன் வீட்டிலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களும் அதையேற்று வழக்கு முடியும் வரை அவர் வீட்டில் தங்கினர். வழக்கு என்பது மற்ற வழக்குகளைப் போலத்தான். ஆங்கிலேய அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்வதுதான் இவர்கள் நோக்கம் என்று குற்றம் சாட்டப்பட்டது. பல மாதங்கள் வழக்கு விசாரணை நடந்து இறுதியில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. முசாபருக்கும், மற்ற மூவருக்கும் நான்காண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

தண்டனை வழங்கப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே ‘போல்ஷ்விக் குற்றவாளிகளுக்கு விசேஷ வகுப்பு கிடையாது. அவர்கள் சாதாரண குற்றவாளிகளைப் போல நடத்தப்பட வேண்டுமென்று ஆங்கிலேய அரசாங்கம் உத்தரவிட்டது. இதனால் முசாபருக்கும் மற்ற மூவருக்கும் சிறிய கால்சட்டை அளிக்கப்பட்டது. கழுத்தைச் சுற்றி இரும்பு வளையம் மாட்டப்பட்டது. அதேபோல் காலிலும் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது. இதர கைதிகளுடன் சேர்த்து இவர்கள் அடைக்கப்படவில்லை. இவர்கள் நால்வரும் அரசாங்கத்திற்கு மனு அனுப்ப விரும்பினர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அன்று மதியத்திலேயே அந்த நால்வரும் வெவ்வேறு சிறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர். முசாபர் அகமது ரேபரேலி மாவட்டச் சிறைக்கும், சௌகத் உஸ்மானி பரேய்லி சிறைக்கும், டாங்கே சீத்தாபூர் மாவட்டச் சிறைக்கும், நளினி குப்தா கோரக்பூர் சிறைக்கும் அனுப்பப்பட்டனர். 

டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிங்காரவேலர் படிப்படியாக குணமடைந்தார். ஏப்ரல் 27ஆம் தேதியன்று இந்தியாவின் வைஸ்ராய்க்கு ஒரு மனு அனுப்பினார். அதில், தான் சற்று குணமடைந்து வருவதாகவும், அது நீடித்தால் ஜூலை 1ஆம் தேதி அளவில் தன் மீதான வழக்கு விசாரணையை பம்பாயிலோ அல்லது சென்னையிலோ தொடரலாம் என தெரிவித்தார். அந்த மனு சென்னை அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அந்த வழக்கை மாற்ற வேண்டியதில்லை. சிங்காரவேலர் கான்பூரிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என பதில் எழுதி அனுப்பினர். ஆனால் உளவுத்துறையின் பிரதான அதிகாரியிருந்த சிசில் கேயி வேறு மாதிரியாக கருதினார். கான்பூர் சதிவழக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதால் இந்திய அரசாங்கத்தின் குறிக்கோள் நிறைவேறிவிட்டது. எனவே இனி சிங்காரவேலர் மீது மட்டும் இந்த வழக்கை தனியாக நடத்துவதால் எந்த விதமான பலனும் கிடையாது என்று கருதுவதாக அவர் அரசாங்கத்திற்கு எழுதிவிட்டார். எனவே அரசாங்கம் அதையேற்று சிங்காரவேலர் மீது வழக்கு தொடராமல் கைவிட்டுவிட்டது.

ரேபரெய்லி சிறையில் மிகவும் கடுமையாக நடத்தப்பட்டதால் பலவீனமாயிருந்த முசாபர் அகமது மேலும் பலவீனமானார். இதன் விளைவாக ஜூலை மாதத்தின் ஒரு நாள் இரவில் ரத்தமாக வாந்தி எடுத்தார். அவர் இருந்த அறை முழுவதும் ரத்தமயமாக இருந்தது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலை மருத்துவர் டாக்டர் முகர்ஜி என்பவர் முசாபரைச் சந்தித்து நோய் குறித்து விவரமாகக் கேட்டார். சிலநாட்கள் கழித்து அவர்மீண்டும் முசாபரை சந்தித்தார். முசாபரை அல்மோரா மாவட்டச் சிறைக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கே சென்று நன்றாக உண்டு உடல் நலனை தேற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார். 

அதன்படி முசாபரை காவல்துறையினர் அல்மோரா சிறைக்கு அழைத்து வந்தனர். அந்தச் சிறையானது மலை உச்சியில் இருந்ததால் முசாபர் காவலர்கள் உதவியுடன் மிகுந்த சிரமத்துடன்தான் ஏறிச் செல்ல முடிந்தது. அடுத்தநாள், அதாவது 1925 செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் முசாபர் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தான் ஏன் விடுதலை செய்யப்பட்டோம் என்பது தெரியாது. என்ன நடந்தது என்றால், ரேபரேலி சிறையின் மருத்துவப் பொறுப்பாளரான டாக்டர் டி.கே.முகர்ஜி, முசாபர் உடல்நிலை குறித்து 1924 ஜூலை 8ஆம் தேதி அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் முசாபருக்கு காசநோய் ஏற்பட்டிருக்கிறது என்றும், அவர் தொடர்ந்து சிறையில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று முகர்ஜி கூறியிருந்தார். இந்தக் கருத்தை மாகாண அரசாங்கத்தின் உதவிச் செயலாளர் பென்னட் என்பவரும் ஆமோதித்து முசாபரை விடுதலை செய்யும்படி சிபாரிசு செய்திருந்தார்.  அரசாங்கம் அதையேற்று முசாபரை விடுதலை செய்தது. தான் விடுதலை செய்யப்பட்ட பின்னர்தான் தனக்கு காசநோய் ஏற்பட்டுள்ளது முசாபருக்கு தெரியும். இதைத் தொடர்ந்து அவர் அங்கேயே ஒரு நண்பர் வீட்டில் தங்கி சிகிச்சை மேற்கொண்டு ஓய்வெடுக்கலானார். 

சிலநாள் கழித்து அவருக்கு 30 ரூபாய் மணியாடர் வந்தது. அதை சத்ய பக்தா என்பவர் அனுப்பி, தான் 1925ஆம் ஆண்டு  கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாட்டை கூட்டப்போவதாகவும், அதற்கு முசாபர் வர வேண்டுமென்றும், பயணச் செலவுக்காக இத்தொகையை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார். முசாபர் அகமதுவுக்கு அவர் யார் என்று தெரியாது. இருந்தாலும் மாநாட்டுக்கு போவதென்று அவர் முடிவு செய்தார்.