tamilnadu

img

தொடர்ந்து அடி வாங்கும் தொழில்துறை.... 8 முக்கியத் துறைகள் 4-வது மாதமாக வீழ்ச்சி

புதுதில்லி:
நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை  எரிவாயு,சிமெண்ட், மின்சாரம், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு ஆகிய அடிப்படை தொழிற்துறைகளே, நாட்டின் முக்கிய 8 தொழில்துறைகளாக கருதப்படுகின்றன. இந்தத் துறைகள், 2019 ஆண்டின்  துவக்கத்திலிருந்தே கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.இந்நிலையில், 2019 நவம்பரில் மட்டும் 1.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியை பதிவு செய்யும் விதமாக ஐஐபி குறியீடுவெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பரில் இந்த குறியீடு 126.3 ஆக இருந்துள் ளது. இது கடந்த 2018 நவம்பருடன் ஒப்பிடுகை யில் 1.5 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.தனித்தனி துறைகளாகப் பார்க்கையில்- நடப்பாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மட்டும்-நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.3 சதவிகிதம், கச்சா எண்ணெய் உற்பத்தி 5.9 சதவிகிதம், இயற்கை எரிவாயு உற்பத்தி 3.1 சதவிகிதம், சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி1.1 சதவிகிதம், சிமெண்ட் உற்பத்தி 0.02 சதவிகிதம் என வீழ்ச்சி கண்டுள்ளன. 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரை தொடர்ந்து நான்காவது மாதமாக அடிப்படைத் தொழிற்துறைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. உரங்கள் உற்பத்தித்துறை (4 சதவிகிதம்), உருக்கு உற்பத்தித்துறை (5.2 சதவிகிதம்), மின்சார உற்பத்தித் துறை (0.7 சதவிகிதம்) ஆகியவை மட்டும் சற்று வளர்ச்சி கண்டுள்ளன.