புதுதில்லி:
இந்தியாவின் சீரமைப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்காக, மோடி அரசுக்கு எவ்வளவு கடன் வேண்டுமானாலும் தருவதற்குத் தயார் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
இந்த அடிப்டையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து செயலாற்ற ஆர்வத்துடன் காத்திருப்பாகவும் ஐஎம்எப் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.“எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும்; அதற்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்” என்று ஐஎம்எப் உயர் அதிகாரியான ஜெர்ரி ரைஸ் கூறியுள்ளார்.
முன்னதாக, “இந்தியா பண வீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவுபடுத்தப்பட வேண்டும்” என்றும் ஜெர்ரி ரைஸ் கூறியிருக்கிறார். “புதிய அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்; அந்த நோக்கத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ள நிலையில், இன்னும் பல காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஐஎம்எப் கூறியுள்ளது.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசின் ஒட்டுமொத்த கடன் தொகை 53 லட்சத்து 11 ஆயிரத்து 81 கோடி ரூபாயாக இருந்தது. இது 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 83 லட்சத்து 40 ஆயிரத்து 26 கோடி ரூபாயாக உயர்ந்தது.
அதாவது, ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியர் தலையிலும் கூடுதலாக தலா 24 ஆயிரத்து 300 ரூபாய் கடன்சுமையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.அதேபோல, உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அளிக்கப்படும் மானியம், விவசாயத்திற்கு அளிக்கப்படும் உர மானியம், ஊக்கவிலை, கல்விக்கான நிதி ஒதுக்கீடு, தொழிலாளர் நலனுக்கான திட்டங்கள், கல்விக் கடன், எரிவாயு மானியம் போன்றவற்றை படிப்படியாக நிறுத்தி விட வேண்டும் என்று நீண்டகாலமாக ஐஎம்எப் கூறிவதையும், கடந்த ஐந்தாண்டுகளில் பெருமளவில் மோடி செய்து முடித்துள்ளார்.
ஆனால், இதுபோதாது, மேலும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் என்று ஐஎம்எப் சூசகமாக தெரிவித்துள்ளது.