சிறு தடியடி, கொடி அணிவகுப்பு கூட நிலைமையை மாற்றியிருக்கும்
புதுதில்லி, மார்ச் 13 - என்னை வேண்டுமானால் குற்றம் சாட்டுங்கள்; தயவுசெய்து காவல்துறையை எதுவும் சொல்லாதீர்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘உருக்கம்’ காட்டியுள்ளார். தில்லியைப் பொறுத்தவரை, மத்திய உள்துறை - காவல்துறை ஆகிய இரண்டுமே ஒன்றுதான். காவல்துறை சங்-பரிவாரின் வன்முறையைத் தடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டின் உள்ளீடு, அதற்குரிய உத்தரவு உள்துறை அமைச்சகத்திடமிருந்து காவல்துறைக்கு போகவில்லை என்பதுதான். ஆனால் சாமர்த்தியமாக அதை மறைத்து, காவல்துறையை காப்பாற்றுவது போலவும், மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுக்களை மறைக்கும் நாடகத்தையும் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி இருக்கிறார். இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்கள் நடத்திய வன்முறையை தடுக்காமல், காவல்துறை முழுக்க முழுக்க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாக, ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சந்தீப் தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையால் குறைந்தபட்சம் ஒரு கொடி அணிவகுப்பு, தடியடி போன்றவை நடத்தப்பட்டிருந்தால் கூட, தில்லியின் நிலைமைகள் இந்த அளவிற்கு போயிருக்காது என்று அவர் கூறியுள்ளார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:
- நீங்கள், வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்ற தில்லியின் வட கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பாதிப்புக்களைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறீர்கள். அங்கே என்ன பார்த்தீர்கள்?
சந்தீப் தீட்சித்: முதலில் இது தொடர்பாக எனக்குக் கூறப்பட்ட விஷயம், இது ஏதோ குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவானவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என்றுதான். ஆனால் பிப்ரவரி 24 அன்று நிலைமை கள் தவறான பாதையில் வேகமாகச் செல்லத் தொடங்கின. எனவே நான், என்னுடைய மக்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அன்று மாலை அங்கே சென்றேன். அந்தப் பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால், நான் திரும்பி விட்டேன். பிப்ரவரி 25 அன்று திரும்பவும் அங்கே சென்றேன். முஸ்லிம்களும், இந்துக்களும் அதிகமாக வாழும் இடங்களுக்குச் சென்று பார்த்தேன். அப்போது, இரு சமூகத்தினரிடமும் ஒருவிதமான கொந்தளிப்பான மனநிலையும் அச்ச உணர்வும் இருந்ததைக் காண முடிந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நீடித்துக் கொண்டிருப்பதால் இந்து சமூகத்தினர் மத்தியில் ஒருவிதமான கோபம் இருந்தது. இதற்கிடையே பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் வெறுப்பைக் கக்கும் உரை வந்தது. தன்னைச் சுற்றிலும் காவல்துறையினர் புடைசூழ நின்றுகொண்டிருந்த சூழ்நிலையில் அவர் கூறிய செய்திகள், ‘நாம் எது செய்தாலும் நம் பக்கம் யார் (போலீசார்) இருப்பார்கள்’ என்ற செய்தியை மக்களுக்கு அளித்தது.
- போலீசாரின் பங்களிப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சந்தீப் தீட்சித்: ஆரம்பத்தில் அவர்களின் நடவடிக்கை என்பது முற்றிலுமாக செயல்படாத தன்மையானதாகவும், ஒரு சமூகத்தினருக்கு மட்டும் உதவக் கூடிய விதத்தில் ஒருதலைப்பட்சமாகவும் இருந்தது. போலீசாரின் முன்பாகவே சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்போது அதைத் தடுப்பதற்காக போலீசார் யாருடைய கட்டளைக்காகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் பதவி ஏற்கும்போது எடுத்துக்கொண்டுள்ள உறுதிமொழியின்படி, தங்களுக்கு முன் நடக்கக்கூடிய வன்முறையில் தலையிட்டு, தங்கள் கடமையை அவர்கள் ஆற்றியிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை. ஆகவே, அவர்களுக்கு இவ்வாறு வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், நிலைமைகள் மிகவும் மோசமாகச் செல்லும் வரைக்கும் எதுவும் செய்யக்கூடாது என்ற விதத்திலும் தெளிவான முறையில் அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் ஒரு சமூகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் பயந்திருக்க வேண்டும். ஏனெனில், அந்த சமூகத்தினருக்கு ஆதரவாக அரசாங்கமே இருந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தங்கள் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் பெரிய அளவிலான அதிரடிப்படையினர் முகாம்கள் இரண்டு நிலை நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றை அழைத்திருந்தால் ஐந்து நிமிடங்களுக்குள் அவர்கள் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் இது கடமையிலிருந்து தவறிய வழக்காக மாறி இருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால் சட்டமும், நடுவுநிலைமையும் வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன.
- நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு, உங்கள் பார்வையில், யார் பொறுப்பு?
சந்தீப் தீட்சித்: முதலாவதாக இங்கே ஒருவிதமான அரசியல் சூழ்நிலை இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். இரண்டாவதாக, இதற்கு நேரடியாக முன்னாள் காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் பொறுப்பாவார். அவர் நேர்மையற்ற முறையில் வெளியே சென்றுவிட்டார். இரண்டு அல்லது மூன்று மணி நேர விஷயம்தான். ஒரு கொடி அணிவகுப்பு, ஒரு தடியடி (லத்தி சார்ஜ்), ஒரு சில கண்ணீர்ப் புகைக் குண்டுகள். நிலைமைகள் முழுமையாக இயல்பு நிலைமைக்குத் திரும்பி இருக்கும்.
- ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? காவல்துறை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்களே!
சந்தீப் தீட்சித்: ஏஏபி அரசாங்கம் வீதிக்கு வந்திருந்தால் இதில் எதுவும் நடந்திருக்காது. ஏஏபி அரசாங்கத்தின்கீழ்தான் சப் டிவிஷசனல் மாஜிஸ்திரேட்டுகள் (கோட்டாட்சியர்கள்) மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்து இயங்கத் தொடங்கியிருந்தால், இந்த வன்முறை வெறியாட்டங்கள் எதுவும் நடந்திருக்காது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய சக அமைச்சர்கள் இந்தப் பகுதிக்கு, தங்கள் பாதுகாப்பு அணியினருடன் வலம் வந்திருந்தார்கள் எனில், போலீசார் இந்த அளவிற்கு செயலற்று இருந்திருக்கமாட்டார்கள். முதலமைச்சர் பயணம் செய்யும்போது, போலீசார் செயலற்று இருந்திட முடியுமா? தனக்கு முஸ்லிம் வாக்காளர்களும் உண்டு என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு தெரியும். எனவே, இரு சமூகத்தினருக்குமான ஒரு தலைவராகத்தான் அவர் நடந்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் நடந்துகொள்ளவில்லை. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் விதத்தில் அவர் நடந்து கொண்டிருக்கிறார். (He is hunting with the hound and running with the hare.) அதனால்தான் இந்த அளவிற்கு வன்முறை வெறியாட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்த வாக்கு, வகுப்புவாதத்திற்கு எதிரானது அல்ல. இலவச மின்சாரத்திற் காக அளிக்கப்பட்ட வாக்குகளாகும். மதச்சார்பின்மையின் பக்கம் அவர் நிற்பார் என்று பலர் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தி இந்து நாளிதழ், (ஆங்கிலம்), 10.3.2020
தமிழில்: ச. வீரமணி